search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
    X

    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது.

    இதை ஏற்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்ததுடன் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன் வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுதாக்கல் செய்தது. இதற்கிடையே நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரும் தாங்கள் 20 ஆண்டுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனுதாக்கல் செய்தார்.

    அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 7 பேரும் 24 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் 2 கடிதங்கள் எழுதியது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்துக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி கெடு விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது.

    இந்த வி‌ஷயத்தில் ஜனாதிபதியின் கருத்தையும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. வழக்கு விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை பரிசீலித்த ஜனாதிபதி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.


    இந்த விவகாரம் தொடர்பான மத்திய மந்திரிகளின் ஆலோசனையை ஏற்று ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

    தமிழக அரசு விடுவிக்க கோரிய 7 பேர் மீதான வழக்கு சி.பி.ஐ. சம்பந்தப்பட்டதாகும். இது மாநில அரசின் வரம்புக்குள் வராது என்றும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முன்பு வாதாடியது.

    சாதாரண கைதிகளுக்கும் முன்னாள் பிரதமர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் சி.பி.ஐ. வழக்கு தொடர்பான கைதிகளை விடுவிக்க இயலாது என்றும் மத்திய அரசு வாதாடியது.

    இந்த காரணங்களை வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 கைதிகளையும் விடுவிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

    சில நாட்களுக்கு முன்பு வரை 7 பேரும் விடுதலையாக கூடிய சாதகமான வாய்ப்புகள் இருந்தது. தற்போது ஜனாதிபதியே திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி உத்தரவை மீறி சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். #RajivMurderCase
    Next Story
    ×