search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder threat"

    போடி அருகே மணல் திருட்டை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஆற்றங்கரை பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் தினசரி ரோந்து மேற்கொண்டு மணல் திருடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்தாலும் மணல் கடத்தலை தடுக்க முடிவதில்லை.

    கொட்டக்குடி ஆறு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மணல் அள்ளி வந்ததை கண்டறிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி டிராக்டரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் மணல் திருட்டு குறித்து ஆய்வுக்கு சென்ற தாசில்தார் ஆர்த்தியை ஒரு கும்பல் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் திருடி வந்ததை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மணிமாறனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கண்டமனூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அல்லிநகரம் பாண்டிக்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (49) என்பது தெரிய வந்தது.

    குடிபோதையில் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் தலைமை காவலர் திலகர்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த பீட்டரை நிறுத்தி விசாரித்தனர். குடிபோதையில் இருந்த பீட்டர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது நண்பர்களான ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தேவராஜ் ஆகியேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் மூன்று பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பீட்டர், பிரபாகரன், தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    தூத்துக்குடியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பாலதண்டாயுதபுரத்தை சேர்ந்தவர் முகமது பரூக் (வயது 51). தொழிலதிபரான இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிவந்தான்குளத்தை சேர்ந்தவர் செல்வமதன் (51). இவரும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 5.10.17-ல் முகமது பரூக்கிடம் கடனாக ரூ. 45 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கொடுத்ததில் இதில் ரூ. 5 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனை முகமது பரூக் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் செல்வமதன் மறுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் ப    ணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த செல்வமதன், அவரது மகன்கள் பொன் விக்னேஷ், பொன் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து முகமது பரூக்கை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜெ.எம் 2-வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார். இதன்பேரில் போலீசார் செல்வமதன் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருமங்கலம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில், கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் செல்வி (வயது 22) பி.இ. பட்டதாரி.

    இவருக்கும், பக்கத்து ஊரான கல்லணைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி மகன் மாரிச்செல்வம் (25) என்ற பட்டதாரி வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிச்செல்வத்தின் வீட்டு முன்பு அமர்ந்து செல்வி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    காதலன் மாரிச்செல்வம் திருமணத்திற்கு மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

    அதில், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதோடு, தான் அதற்கு உடன்படாததால் திருமணம் செய்ய மாரிச்செல்வம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் காதலன் வீட்டு முன்பு தர்ணா நடத்தியபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாரிச்செல்வம், அவரது தந்தை மலையாளி, தாயார் கருப்பசாமி, சகோதரர்கள் பகவதி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் பகவதி 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராகவும், கார்த்திக் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ராமநாதபுரத்தில் காதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் ராஜா.இவரும் இதே கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவை சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா பெற்றோரை பார்க்க விரும்பியதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்துள்ளனர்.

    அதன் பின்னர் ராமநாதபுரம்அருகே சக்கரகோட்டையில் வாடகை வீடு பிடித்து தங்கி வந்தனர். சில மாதங்களாக குமார் ராஜா வேலைக்குச் செல்லவில்லை. இதனை சண்முக பிரியா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார்ராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கணவர் குமார்ராஜா, மாமியார் ராஜம்மாள், உறவினர் செல்வம் ஆகிய 3 பேர் மீது கேணிக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பழகன். (வயது 55). இவர் நேற்று கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் (39) என்பவர் ஆட்டோவில் கடற்கரை சாலை வழியாக செல்ல முயன்றார். 

    இதனை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தடுத்து நிறுத்தி அந்த வழியாக செல்ல கூடாது என கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜாண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

    இதுகுறித்து அன்பழகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாணை போலீசார் கைது செய்தனர். 
    மதுரை அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் உலகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). நேற்று இரவு ஆத்திக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த போக்கு வரத்து போலீஸ்காரர் கார்த்திக், தடுத்து நிறுத்தினார். அவர் ராஜ்குமார் மது அருந்தி உள்ளாரா? என்பதை அறிய அதற்கான கருவி மூலம் பரிசோதனை நடத்த முயன்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜ்-குமாரை கைது செய்தனர்.

    மலையாள நடிகரான குஞ்சாக்கோ பாவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    காதலுக்கு மரியாதை என்ற தமிழ் சினிமாவில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சினிமா முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல கேரள சினிமா நடிகர் குஞ்சாக்கோ பாவன் நடித்திருந்தார். அதன்பின்னர் 50-க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்.

    சம்பவத்தன்று கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புகாக எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் குஞ்சாக்கோ பாவன் அருகே வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். வாலிபரின் செயலை பார்த்த குஞ்சாக்கோ பாவன் அதிர்ச்சியடைந்தார். அந்த வழியே வந்த பொதுமக்கள் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கண்ணூர் ரெயில் வந்ததும் குஞ்சாக்கோ பாவன் ரெயில் ஏறி படப்பிடிப்புக்கு புறப்பட்டார். கண்ணூர் ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் எர்ணாகுளம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா கட்சி பதிவுகளை வைத்து வாலிபரை தேடினர்.

    இந்நிலையில் நேற்று அந்த வாலிபரை ரெயிவே போலீசார் கைது செய்தனர். நடிகர் குஞ்சாக்கோ பாவனை கொலை செய்ய முயன்றது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    முன்னாள் எம்.பி. ஆரூணுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon
    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் முஸ்லிம் அமைப்பு தேர்தல் நடந்தது.

    அப்போது வாக்களிக்க வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஆரூணுக்கும், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அஸ்லம் பாட்சா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அஸ்லம் பாட்சா ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆரூண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஆரூண் ராயப்பேட்டை போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கல்லூரியில் நடந்த முஸ்லிம் அமைப்பு தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த அஸ்லம் பாட்சா உள்பட 10 பேர் என்னிடம் தகராறு செய்தனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.

    இதையடுத்து போலீசார் அஸ்லம் பாட்சா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon


    செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மதுரை மாநகர் போலீசில் தஞ்சம் அடைந்தது.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம், காற்றாடைகுளத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் தீபா. கல்லூரி மாணவியான இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தீபா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு தீபா வெளியேறினார். பின்னர் சுரேஷ்-தீபா நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு காதல் ஜோடி வந்தனர். எங்களுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு வழங்ககோரி மனு கொடுத்தனர். #tamilnews
    கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோட்டயம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தினசரி அவர் கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்தார்.

    இந்தநிலையில் கல்லூரி மாணவி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மாணவி மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.இது குறித்து கல்லூரி மாணவி காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜே.எம். 3 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுசாமி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.

    மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியவில்லை. இது போன்ற தண்டனை பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். #tamilnews
    ×