search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mekedatu dam"

    • மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
    • கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.

    மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.

    கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுதி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

    அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
    • கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."

    "விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.

    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான்.
    • கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு.

    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா தேர்தல் முடிவு எதிரொலியாக, திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. அகற்றப்பட்டதாக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் ஏன் இதை கூறவில்லை? அல்லது 2018 தேர்தல் முடிந்து 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை? எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக இந்த கருத்தை தெரிவிக்கிறார்

    அவருக்கு, பா.ஜ.க.வினுடைய வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் மத்தியில் அன்பை பெற்றுவிட்டது என்று முதலமைச்சருக்கு தெரியும். எனவே தான் தினந்தோறும் பா.ஜ.க. புராணம் பாடிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க. ஒரு தேசிய கட்சி ஒரு தேர்தலில் தோற்கும். ஒரு தேர்தலில் வெற்றி பெறும். ஆனால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின்போது நான் எஸ்.பி.யாக இருந்தபொழுது என் மீது அதிக அன்புடன் இருப்பார். அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.

    கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு. அதில் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் நல்ல ஆட்சியை காங்கிரஸ் கொடுக்க வேண்டும். தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல மேகதாது அணையை கொண்டு வந்து விடாதீர்கள். நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால், அதை எதிர்த்து நடக்கும் முதல் போராட்டம் பா.ஜ.க. சார்பில் என்னுடையதாக இருக்கும். கர்நாடகாவில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார் அதில் 'மேகதாது மட்டும் வேண்டாம்' என்ற வார்த்தை உள்ளதா? என்று நானும் தேடி பார்த்தேன். ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயை திறக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது.
    • மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டும் திட்டத்தை தொடங்கும் முன்பாகவே, முந்தைய அரசு பல தவறுகளை செய்திருந்தது. அதனால் தற்போது மேகதாது திட்டம் பிரச்சினையில் சிக்கி உள்ளது. அன்றைய அரசு மேகதாது திட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது. தற்போது மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி கொண்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேகதாது அணைகட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

    திட்ட அறிக்கை கூடிய விரைவிலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய பட்ஜெட்டிலேயே மேகதாது திட்டத்திற்காக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கி இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
    • காவிரியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்

    புதுடெல்லி:

    கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

    காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேகதாது அணை பாதுகாப்பு விவசாயிகள் நாளை டெல்லியில் பேராராட்டம் நடத்த உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது.
    • விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்குடன் கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள கோரிக்கை சட்ட விரோதமானது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டும் என்று கோரி கடந்த 21-ந்தேதி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

    எனவே, மத்திய அரசே நினைத்தாலும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதை தவிர வேறில்லை.

    அதே நேரத்தில் கர்நாடகத்தை இப்போது ஆளும் கட்சி, அதன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மேகதாது அணையை தான் முக்கிய கருவியாக நம்பிக் கொண்டிருக்கிறது.

    அதனால், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

    எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எத்தகைய நிலையிலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
    • கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.

    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. இதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அந்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும்.

    மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.

    புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும்.

    கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.

    இவ்வாறு அந்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.
    • இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது.

    மைசூரு:

    கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணைகள் முக்கியமானவை. குடகு மாவட்டம் மற்றும் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இந்த இரு அணைகளின் நீர் தான் காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழ்நாடு-கர்நாடகம் இடையே பகிர்ந்து வரப்படுகிறது.

    இந்த நிலையில் இரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணைகளுக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீதம் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், நீர்மட்டம் உயர்ந்ததாலும் அணைகளின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டது. கே.ஆர்.எஸ். அணையில் திறந்த நீர் காவிரியில் பாய்ந்தோடியது.

    இரு ஆறுகளும் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா அருகே கூடலுசங்கமாவில் இணைந்து அகன்ற காவிரியாக சாம்ராஜ்நகர் வழியாக தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் ஒனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையும், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின.

    நடப்பு ஆண்டில் ஜூலை 2-வது வாரத்திலேயே இரு அணைகளும் நிரம்பிவிட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் இரு அணைகளும் ஜூலையில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அணைகள் நிரம்பியதை தொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அணைகளில் முதல்-மந்திரி பாகினா பூஜை சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு அணைகள் நிரம்பியதை தொடர்ந்து நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இரு அணைகளிலும் பாகினா பூஜை நிறைவேற்றினார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மைசூரு சென்றார். அங்கிருந்து அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்றார். மேலும் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து சாமுண்டிஅம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் அவர் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா எலச்சினஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு சென்றார். அங்கு வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்த பசவராஜ்பொம்மை, பாகினா பூஜை செய்து வழிபட்டார். அதாவது, ஒரு முறத்தில் நவதானியங்கள், துணி, மஞ்சள், வளையல், பூ, குங்குமம், பழங்கள், தேங்காய், வெற்றிலை,பாக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து மற்றொரு முறத்தால் மூடி அதனை அணை நீரில் விடுவதே பாகினா என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நவதானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய முறத்தை பசவராஜ்பொம்மை அணை நீரில் விட்டு வழிபட்டார்.

    அங்கு பூஜையை முடித்த அவர் காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கும் அவர் அணை நிரம்பியதால் வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் பாகினா பூஜையை அவர் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகளின் போது முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன், அவரது மனைவி சென்னம்மா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூரு கலெக்டர் பகாதி கவுதம், மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, கலெக்டர் அஸ்வதி மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக கபினி அணையில் பூஜை முடித்த பிறகு பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வட கர்நாடகத்தில் கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்கர்நாடகத்தில் காவிரி, கபிலா, ஹேமாவதி, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, துங்கப்பத்ரா உள்ளிட்ட அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளனர். இதனால் வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து, அணைகளில் பூஜை செலுத்துகிறேன். சாமுண்டீஸ்வரி வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தேன். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்.

    இந்த ஆண்டு மாநிலத்தில் நீர்பிரச்சினை வராது. விவசாயிகளுக்கு அனுகூலம் ஆகும் வகையில் பாசன கால்வாய்களை தூர்வாரி, விளை நிலங்களுக்கு தடையின்றி பாசன நீர் சுலபமாக செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.

    கபினி அணையின் முன் பகுதியில் இருக்கும் காலியான இடத்தில் அழகான பூங்கா அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சார்பில் இந்த பூங்காவை அமைப்பதா அல்லது தனியார் கட்டுப்பாட்டில் இந்த பூங்காவை அமைப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கர்நாடக மாநிலத்திலேயே மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட்டை தாலுகா மிகவும் பின்தங்கிய, வளர்ச்சி காணாமல் இருக்கும் தாலுகாவாக உள்ளது என பெயர் இருக்கிறது. அதை மாற்றுவதற்காக இந்த தாலுகாவை வளர்ச்சி அடைய வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தீர்ப்பு வெளியானதும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். அதன் பிறகு திட்ட பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திட்டங்களால் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

    ங்கள் அரசு விவசாயிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. மண்டியா பகுதியின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றினால் நம்மை மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்.

    மண்டியா சர்க்கரை ஆலையில் உற்பத்தி பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு தேவையான செலவுக்கு அரசே நிதி ஒதுக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கர்நாடகத்தில் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய காவிரி ஆற்றை நாம் பயன்படுத்தி கொள்வது நமது கடமை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    மேகதாது அணை, கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுமதி கேட்டு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முடிவில் தீவிரமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

    இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

    • மத்திய மந்திரி உறுதி மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.
    • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது.

    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் திட்டத்துக்காக அந்த அணை கட்டப்படுவதாக அந்த அரசு கூறுகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, காவிரி பாயும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதங்கள் எழுதியுள்ளது.

    இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழு டெல்லி நேற்று சென்றது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, டெல்லியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு, மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்தது. அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் மத்திய மந்திரியுடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வைகோ, தம்பிதுரை, ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கு.செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, நயினார் நாகேந்திரன், தி.ராமச்சந்திரன், பி.சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவிரி தொழில் நுட்பக்குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

    மத்திய மந்திரி உறுதி மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

    ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வக்கீல்களிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

    மத்திய மந்திரி எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை அவர்கள் உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தல்
    • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தமிழக குழு வலியுறுத்தல்

    புதுடெல்லி:

    தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர். பின்னர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வைகோ, மு. தம்பித்துரை, ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, கு. செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, நயினார் நாகேந்திரன், தி.இராமசந்திரன், பி. சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், எம். ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா. உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞரிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

    ஜல்சக்தி துறை அமைச்சர் அவர்கள் எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    ×