search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்: பசவராஜ் பொம்மை
    X

    மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்: பசவராஜ் பொம்மை

    • விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.
    • இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது.

    மைசூரு:

    கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணைகள் முக்கியமானவை. குடகு மாவட்டம் மற்றும் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இந்த இரு அணைகளின் நீர் தான் காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழ்நாடு-கர்நாடகம் இடையே பகிர்ந்து வரப்படுகிறது.

    இந்த நிலையில் இரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணைகளுக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீதம் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், நீர்மட்டம் உயர்ந்ததாலும் அணைகளின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டது. கே.ஆர்.எஸ். அணையில் திறந்த நீர் காவிரியில் பாய்ந்தோடியது.

    இரு ஆறுகளும் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா அருகே கூடலுசங்கமாவில் இணைந்து அகன்ற காவிரியாக சாம்ராஜ்நகர் வழியாக தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் ஒனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையும், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின.

    நடப்பு ஆண்டில் ஜூலை 2-வது வாரத்திலேயே இரு அணைகளும் நிரம்பிவிட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் இரு அணைகளும் ஜூலையில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அணைகள் நிரம்பியதை தொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அணைகளில் முதல்-மந்திரி பாகினா பூஜை சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு அணைகள் நிரம்பியதை தொடர்ந்து நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இரு அணைகளிலும் பாகினா பூஜை நிறைவேற்றினார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மைசூரு சென்றார். அங்கிருந்து அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்றார். மேலும் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து சாமுண்டிஅம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் அவர் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா எலச்சினஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு சென்றார். அங்கு வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்த பசவராஜ்பொம்மை, பாகினா பூஜை செய்து வழிபட்டார். அதாவது, ஒரு முறத்தில் நவதானியங்கள், துணி, மஞ்சள், வளையல், பூ, குங்குமம், பழங்கள், தேங்காய், வெற்றிலை,பாக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து மற்றொரு முறத்தால் மூடி அதனை அணை நீரில் விடுவதே பாகினா என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நவதானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய முறத்தை பசவராஜ்பொம்மை அணை நீரில் விட்டு வழிபட்டார்.

    அங்கு பூஜையை முடித்த அவர் காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கும் அவர் அணை நிரம்பியதால் வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் பாகினா பூஜையை அவர் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகளின் போது முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன், அவரது மனைவி சென்னம்மா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூரு கலெக்டர் பகாதி கவுதம், மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, கலெக்டர் அஸ்வதி மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக கபினி அணையில் பூஜை முடித்த பிறகு பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வட கர்நாடகத்தில் கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்கர்நாடகத்தில் காவிரி, கபிலா, ஹேமாவதி, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, துங்கப்பத்ரா உள்ளிட்ட அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளனர். இதனால் வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து, அணைகளில் பூஜை செலுத்துகிறேன். சாமுண்டீஸ்வரி வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தேன். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்.

    இந்த ஆண்டு மாநிலத்தில் நீர்பிரச்சினை வராது. விவசாயிகளுக்கு அனுகூலம் ஆகும் வகையில் பாசன கால்வாய்களை தூர்வாரி, விளை நிலங்களுக்கு தடையின்றி பாசன நீர் சுலபமாக செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.

    கபினி அணையின் முன் பகுதியில் இருக்கும் காலியான இடத்தில் அழகான பூங்கா அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சார்பில் இந்த பூங்காவை அமைப்பதா அல்லது தனியார் கட்டுப்பாட்டில் இந்த பூங்காவை அமைப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கர்நாடக மாநிலத்திலேயே மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட்டை தாலுகா மிகவும் பின்தங்கிய, வளர்ச்சி காணாமல் இருக்கும் தாலுகாவாக உள்ளது என பெயர் இருக்கிறது. அதை மாற்றுவதற்காக இந்த தாலுகாவை வளர்ச்சி அடைய வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தீர்ப்பு வெளியானதும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். அதன் பிறகு திட்ட பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திட்டங்களால் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

    ங்கள் அரசு விவசாயிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. மண்டியா பகுதியின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றினால் நம்மை மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்.

    மண்டியா சர்க்கரை ஆலையில் உற்பத்தி பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு தேவையான செலவுக்கு அரசே நிதி ஒதுக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கர்நாடகத்தில் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய காவிரி ஆற்றை நாம் பயன்படுத்தி கொள்வது நமது கடமை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    மேகதாது அணை, கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுமதி கேட்டு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முடிவில் தீவிரமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×