search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா அரசு"

    • காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

    இதற்கிடையே நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கன அடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது.

    தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    • பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
    • வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர முடிவு.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில்தான் சேவைகள் வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் வங்கிகளில் இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட ஊழியர்கள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மொழி புரிவதில் தகராறு ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக, மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

    ஆனால் கர்நாடகா அரசு போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீரை முழுமையாக திறந்து விட மறுத்து வருகிறது.

    கடந்த 9-ந்தேதி வரை 37.9 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் கர்நாடகா வழங்கியது.

    அதனால் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்து விடுமாறு கூறியதின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டது. ஆனால் இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் அளவை கர்நாடகம் குறைத்து விட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநில கருத்தையும் கேட்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.

    குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கேட்டும் முறைப்படி கர்நாடகா தண்ணீர் தராததால் நெற்பயிர்கள் கருகுவதை சுட்டிக்காட்டும் தமிழகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

    இதே போல கர்நாடகா அரசின் சார்பில் அவர்களும் தங்களது கருத்தை வலியுறுத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனே பரிந்துரைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
    • தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்ட நிலையில், 'தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதாகும்.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்.

    ஆனால், இதுவரை வெறும் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 55.83 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.

    இந்தக் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களிடம் பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர், இனியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக வழக்கம்போல், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.

    தமிழ்நாட்டிற்கு உரிய காவேரி நீரை திறந்து விட்டால்தான் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. ஆனால், அதைச் சொல்ல தி.மு.க. தயங்குகிறது. இது தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்.

    காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

    தி.மு.க. அரசு தனது பொறுப்பினை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்றிரவு டெல்லி சென்றிருந்தார்.

    இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடி பிரச்சினை மிக மோசமாகி விடும்.

    எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாக குறைந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்நாடகாவில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சி.யில் 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் கூறி வருவதையும் மத்திய மந்திரியின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார்.

    எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி சொல்லி உள்ளேன். 22.54 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    • ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை.
    • கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.

    காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

    அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார்.

    அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    • கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.
    • இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் ஆகி வரும் நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளார்.

    அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று (புதன்கிழமை) அவர் சென்னையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்.

    சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதையடுத்து அவர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சியினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டது.

    இந்த ஓராண்டு காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தோம். அ.தி.மு.க. 3 ஆக, 4 ஆக போய் விட்டது. அதில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்து போய் விட்டது என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த பணியை எழுச்சியோடு மேற்கொண்டு ஒன்றரை மாத காலத்தில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்து இருக்கிறோம்.

    இனி அ.தி.மு.க. வெற்றிடம் கொண்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளோம். இனி அந்த வார்ததையை யாரும் பயன்படுத்த வேண்டாம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது.

    அதுவும், இளைஞர்கள், சகோதரிகள், கழக உடன்பிறப்புகள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க.தான். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி.

    சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வுக்கு 'பி' அணியாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 75 நாட்களில் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அ.தி.மு.க. உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அடுத்து வருகின்ற தேர்தலுக்கு அடித்தளமாக எங்களுடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தினார். அவரது வழியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றது.

    அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்களுடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்தோம். 22 நாட்களும் பாராளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது சரித்திர சாதனை.

    அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் காவிரியில் நமக்கு எவ்வளவு பங்கு நீர் கிடைக்குமோ அதை கொடுத்தனர். இப்போது காங்கிரசும் தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன. ஒரே கூட்டணியில் உள்ளன. முதலமைச்சர் ஏன் காவிரி நீரை திறந்து விடுமாறு வற்புறுத்தக்கூடாது.

    இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பேன் என்று சொல்லும் முதலமைச்சர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு பேசி நமக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை ஏன் பெறவில்லை? இது விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி.

    கர்நாடகா மாநிலம் அமைதியாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மேகதாது பற்றிய செய்தியை வெளியிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

    மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பற்றி எங்களின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக இருந்தது. 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினோம். மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டு காலம் முதன்மையாக இருந்து விருதுகளை பெற்றோம்.

    இன்று 4-வது இடத்துக்கு சென்று விட்டது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.

    இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார். அவரிடம் நிர்வாக திறமை இல்லை. 2 ஆண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது வேதனையான விஷயம். ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்க்குதான் அதன் கஷ்டம் தெரியும். அந்த குடும்பத்தினருக்கு தான் வலி தெரியும். அதை இந்த அரசு உணர வேண்டும். உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் குழந்தைக்கு கையை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

    கடலூரில் சளி இருப்பதாக சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2 கையும் இல்லாத ஒருவருக்கு 2 கையும் பொருத்தி சாதனை படைத்தோம். இது போன்ற சாதனையை அ.தி.மு.க. ஆட்சியில்தான் பார்க்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சியில் ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. இனியாவது தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்.

    பருவமழை இன்று சரியாக பெய்யாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல ஏற்கனவே நடவு செய்த பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிக்கு சுத்தமாக தண்ணீர் போகவே இல்லை.

    மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக அரசிடம் கேட்டால் அவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். இதை பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் விரைந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் எப்படி தண்ணீர் திறந்தீர்களோ அதே போல விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவதும் இந்த அரசின் கடமை.

    சரியாக செயல்பட்டால்தான் குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

    மக்களின் நன்மை கருதி இந்த ஆட்சியில் மக்கள் படும் அல்லல்கள், துயரங்கள், துன்பங்கள், வேதனைகள், கஷ்டங்களை முதலமைச்சரிடம் ஊடக நண்பர்கள் கேள்வியாக கேட்டு அதன் மூலமாவது இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யட்டும். முதலமைச்சரிடம் கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.

    தக்காளி 1 கிலோ ரூ. 160-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் போய் விட்டது. இது மட்டுமல்ல பூண்டு, துவரம் பருப்பு உள்ளிட்ட எல்லா மளிகைப் பொருட்களும், ஏழை எளிய மக்கள் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதை பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. அப்படி இருக்கும் போது மாமன்னன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறீர்கள்.

    விலைவாசியை பற்றி கேளுங்கள். மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி பெறும் வகையில் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அப்போதைய சபாநாயகர் தனபால் நான் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார்.

    நான் நிரூபிக்கின்ற போது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக், பெஞ்சை உடைத்து ரகளையில் ஈடுபட்டுஅவரது இருக்கையில் தி.மு.க.வினர் அமர்ந்தனர். இதை மறந்து விடாதீர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வார்கள்?

    எங்களின் உள்கட்சி பிரச்சினையை வெளியில் பேச முடியாது. கழகத்தை பலப்படுத்தி வருகிறோம். விரைவாக கழகத்தின் அனைத்து பணிகளும் நிரப்பப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. தேர்தல் வருகின்ற போது நிச்சயமாக உங்களை அழைத்து எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம்.

    ஏற்கனவே நாங்கள் பா.ஜனதா பற்றி சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதே போல் காலம் கனிந்து வரும் போது நேரம் வரும் போது நிச்சயமாக எல்லாம் வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் கூட்டணி பற்றி பேச இப்போது அவசியம் இல்லை. பா.ஜனதாவுடன் உறவு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
    • இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் அம்மா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.

    அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருப்பதால் முதலமைச்சர், கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய நீரினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
    • தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் காவிரிப்படுகையில் கர்நாடகா அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாச்சாரப்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக அளிக்க கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி தண்ணீர் என்பது தமிழக மக்களின் உயிர் நீர், அவற்றை அளிப்பதில் எந்தவித விதிமீறலும் இருக்கக்கூடாது.

    தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
    • கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.

    மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.

    கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுதி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

    அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×