search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாநில அதிகாரிகள் இன்று ஆலோசனை: காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்
    X

    4 மாநில அதிகாரிகள் இன்று ஆலோசனை: காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்

    • டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

    ஆனால் கர்நாடகா அரசு போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீரை முழுமையாக திறந்து விட மறுத்து வருகிறது.

    கடந்த 9-ந்தேதி வரை 37.9 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் கர்நாடகா வழங்கியது.

    அதனால் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்து விடுமாறு கூறியதின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டது. ஆனால் இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் அளவை கர்நாடகம் குறைத்து விட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநில கருத்தையும் கேட்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.

    குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கேட்டும் முறைப்படி கர்நாடகா தண்ணீர் தராததால் நெற்பயிர்கள் கருகுவதை சுட்டிக்காட்டும் தமிழகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

    இதே போல கர்நாடகா அரசின் சார்பில் அவர்களும் தங்களது கருத்தை வலியுறுத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனே பரிந்துரைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×