search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர், பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட 15 எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

    ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் பட்ஜெட் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி மசோதாவை கொண்டு வர இருப்பதால், அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களும் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டிருந்தார். 

    இந்த கொறடா உத்தரவை மீறியதாக ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தேர் தத் லகான்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாகூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. அவர்கள் மீதான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

    • ஆறு எம்.எல்.ஏ.-க்களை பா.ஜனதா அரியானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
    • மூத்த அரசியல் தலைவரின் மகனும், மந்திரியுமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு தொகுதிக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 40 எம்.எல்.ஏ.-க்களை வைத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாறி வாக்களித்ததால் 25 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிய பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதேவேளையில் பா.ஜனதா இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது எனக் கூறி வருகிறது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான தீர்மானம் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறது. இது தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்தனர்.

    இந்த நிலையில் சட்டமன்றம் கூடிய நிலையில் 15 பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கிடையே ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அரியானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டினார்.

    இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் மந்திரி சபையில் இருந்து விக்ரமாதித்யா சிங் விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

    இதனால் இமாச்சல பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் எம்.எல்.ஏ.-க்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

    சுக்விந்தர் சிங் சுகு

    இதனால் கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே. சிவகுமாரை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளார். அவர் இமாச்சல பிரதேசம் சென்று கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரியானா மாநில முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவும் இமாச்சல பிரதேசம் செல்ல இருக்கிறார்.

    2001-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை பெங்களூரு வரவழைத்து, அவர்களை உபசரித்து நெருக்கடியை தீர்த்தார். அதன்மூலம் சிக்கலை தீர்த்து வைக்கக் கூடியது தலைவர் என டி.கே. சிவக்குமார் பெயர் பெற்றார்.

    தற்போது இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சிக்கலை தீர்த்து வைப்பார் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.

    • கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி
    • டி.கே. சிவக்குமார் மட்டுமே காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவில்லை என மந்திரி விமர்சனம்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை'' எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ''கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும்.

    ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்'' என்றார்.

    • தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
    • முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம்.

    தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது
    • தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூடுகிறது. தமிழக அரசு இதில் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இதற்கிடையே தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கூற கர்நாடகா முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை.
    • நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    வெளிநாட்டில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூர் சென்று சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பெங்களூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு பிரதமர் மோடி தடை விதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும, தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி மீது அவர் மிகவும் எரிச்சல் அடைந்தார். இதனால் நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இது மலிவான அரசியல் அன்றி வேறு ஒன்றுமில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் சந்திரயான்-1 வெற்றிக்காக 22 அக்டோபர் 2008 அன்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாடு மையத்துக்காக அப்போதைய முதல்-மந்திரி மோடி சென்றதை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?

    இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

    • காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
    • தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் தெரிவித்தார்.

    பெங்களூரு:

    டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், 'தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடும்படியும், வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்கவும், செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும்.
    • பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

    காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் சண்டை போட நமக்கு விருப்பம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் நமது சகோதரர்கள். அவர்களுடன் நாம் யுத்தம் (போர்) செய்ய முடியாது.

    ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் பெங்களூருவுக்கு வேலைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    சட்டசபை தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 கிலோ அரிசி கொடுப்பது தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்படி, பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை டெபாசிட் செய்வோம். அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும். ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. பா.ஜனதாவினர் தான்முதலில் அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, அரிசிக்கு பதில் பணம் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போது 10 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவினரின் இரட்டை வேடம் வெளியே வந்துள்ளது. சட்டசபை கூடுவதால் அரசுக்கு எதிராக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர்.பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தட்டும், சந்தோஷம். அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் பா.ஜனதாவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் போராட்டம் நடத்தட்டும்.

    கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை பெற மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான அரிசி நிரந்தரமாக கிடைக்க வேண்டும். ஒரு மாதம் மட்டும் கிடைக்கும் அரிசியை வைத்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை.
    • மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். மேகதாது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை.

    அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு கர்நாடகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 8 அல்லது 9-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இந்த திட்டம் எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    நன்றாக மழை பெய்யும்போது காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கடலுக்கு சென்று கலந்துள்ளது. அதில் நாம் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது 40 டி.எம்.சி. மட்டுமே. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் கன்னட வளா்ச்சித்துறை சாா்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் கெம்பேகவுடா. பெங்களூருவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெம்பேகவுடா ஜெயந்தியை பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். மாநில அளவிலான கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஹாசனில் நடத்தப்பட்டுள்ளது.

    நாளை (இன்று) முதல் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவை நடத்தி சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்திற்கு மட்டுமே சேர்ந்தவர் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர் ஒக்கலிகர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் கர்நாடகத்தின் சொத்து, நமது தேசத்தின் சொத்து. இதை நாம் மறக்கக்கூடாது.

    பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு, ஆலோசனை தேவை. எங்களுக்கு எதிராக எவ்வளவு விமா்சனங்களை கூறினாலும், நாங்கள் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

    பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். மனிதர்களின் குணங்களில் நம்பிக்கை மிகவும் சிறந்த குணம். மக்கள் அந்த நம்பிக்கையை எங்கள் மீது வைத்துள்ளனர். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் குப்பை கழிவுகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர்.
    • லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் தொண்டர்களுடன் நான் ஆலோசிக்கும் போது கிரகஜோதி உள்ளிட்ட அரசின் இலவச திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மக்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கூறினார்கள். இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.22 கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கிரகஜோதி உள்ளிட்ட பிற இலவச திட்டங்களுக்கு ஆன்லைன், அரசு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும் போது ஒரு ரூபாய் கூட மக்கள் கொடுக்க வேண்டாம்.

    அதையும் மீறி லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம். இதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை மைய எண் வழங்கப்படும். அதன்மூலமாக மக்கள் புகார் அளிக்கலாம். அப்படி யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. மேலும் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்ன பாக்ய திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தர்ணா நடத்துவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர். விதானசவுதாவில் தனியாக நின்று தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.

    அன்னபாக்ய திட்டத்தின்படி 5 கிலோ அரிசி பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முன்வரவில்லை. அவர்களால் 5 கிலோ அரிசியால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் வயிறு நிரம்பியவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாக கூறி வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு காரணம் யார்? என்று கூறினால், பலர் வீட்டுக்கு செல்ல நேரிடும். நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவன். அதுபற்றி பேச விரும்பவில்லை. எங்களது ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு.

    பெங்களூரு:

    துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம்.

    அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×