search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran"

    • ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
    • ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தெஹ்ரான்:

    ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே, நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    • பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது. மேலும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

    இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொனசன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, "பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கினோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானுக்குள் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறும்போது, "இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

    தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார்.

    அதேவேளையில் பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
    • தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.

    ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).

    பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.

    இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.

    ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.

    இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

    விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • ஈரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
    • குண்டுவெடிப்பில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.

    ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது."

    "இந்த கடினமான சூழ்நிலையில், ஈரான் அரசு மற்றும் பொது மக்களிடம் எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடனேயே உள்ளது," என குறிப்பிட்டுள்ளார். 

    • ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
    • குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

    ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.

    சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடிய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    • 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை.
    • இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

    • பஹ்லாவி வம்சத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றினார் கொமெய்னி
    • ஈரானின் ராணுவம், இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை என அழைக்கப்படுகிறது

    மேற்காசிய நாடான ஈரானில் 1925லிருந்து பஹ்லாவி வம்சத்தினரின் (Pahlavi Dynasty) மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 1979ல் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பஹ்லாவிகள் ஆட்சி அகற்றப்பட்டு, அயதொல்லா கொமெய்னி (Ayatollah Khomeini) தலைமையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் ஆட்சி பதவிக்கு வந்தது.

    தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை (Islamic Revolutionary Guards Corps) எனும் ஈரானின் ராணுவத்தை ஈரான் அமைத்தது. அதன் 5 முக்கிய அங்கங்களில் ஒன்று குட்ஸ் படை (Quds Force).

    குட்ஸ் படையை கொண்டு ஈரான், பிற நாட்டினர் மீது தங்கள் ஆதிக்கத்தை வளர்க்கவும், தங்கள் கோட்பாடுகளை பரப்பவும், உளவு மற்றும் மறைமுக சதி வேலைகளின் மூலம் நீண்ட காலமாக முயன்று வருகிறது.

    தங்கள் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திளை எதிர்க்கவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் செயல்படும் "எதிர்ப்பின் மையம்" (Axis of Resistance) என வர்ணிக்கப்படும் ஈரான், குட்ஸ் படையினர் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ படைகளையும், அரசியல் கட்சிகளையும் பல நாடுகளில் ஆதரித்து, வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் தங்கள் நாடுகளில் ஈரானுக்கு ஒரு மறைமுக பிரதிநிதியாக (proxy) செயல்படுகின்றன.

    ஈராக், லெபனான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த ஆதரவு, வன்முறை சித்தாந்தங்களை ஏற்காத பிற அரபு நாடுகளில், ஈரானுக்கு கிடைக்கவில்லை.

    ஏமனின் ஹவுதி, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவின் ஜய்னாபியோன் பிரிகேட் மற்றும் ஃபதேமியோன் பிரிவு, ஈராக்கில் கதாய்ப் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன காசா பகுதியின் ஹமாஸ், பக்ரைனின் அல் அஷ்டார் பிரிகேட்ஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், ஈரானின் எதிர்ப்பு மையத்தின் மறைமுக ஆலோசனை, ராணுவ மற்றும் நிதியுதவி ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவை.

    எதிர்ப்பின் மையத்திற்கு நிதியுதவி கிடைப்பதை அனைத்து வழிகளிலும் அமெரிக்கா 1984லிருந்து தடுக்க முயன்று வருகிறது.

    தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை அமைப்புகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஈரானையும், அதன் புரட்சி வீரர்கள் படையின் தாக்கத்தையும் இனி வளர விட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது.
    • ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது.

    ஈரானில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம், அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக கல்வி அமைச்சக அதிகாரி மசூத் தெஹ்ரானி பர்ஜாத் கூறும்போது, "மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த வயதில் குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது" என்றார்.

    ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது. கடந்த மாதம், மாணவர்கள் சர்வதேச பள்ளிகளில் சேருவதற்கு அரசு தடை விதித்தது.

    ஈரானிய குழந்தைகள் நாட்டின் பள்ளி பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இருப்பதாக அரசு தெரிவித்தது.

    • ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
    • தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்

    நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.

    சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.

    இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    டிரம்ப் கூறியிருப்பதாவது:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.

    இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.

    • கைதிகள் பரபஸ்பர விடுதலைக்கு இரு நாடுகளும் சம்மதம்
    • 6 பில்லியன் டாலர் பணப்பரிமாற்றம் மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்ய உதவும்

    ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது.

    மேலும், தென்கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் மற்றம் அவற்றின் துணை நாடு துருப்புகளை ஈரான் மத்திய கிழக்கு கடற்கரை பகுதியில் அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி ஜோ பைடன் அரசை விமர்சிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • ஐ.நா. சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு
    • 202.8 கிலோகிராம் மட்டுமே அதிகபட்சமாக வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது

    அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு.

    மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது. தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது.

    2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது.

    இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.

    இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது. ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன.

    ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானில் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியுள்ளது.
    • நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், "புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது" என்றார்.

    அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×