search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்: போர் விமானங்கள் குண்டுகளை வீசியது
    X

    ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்: போர் விமானங்கள் குண்டுகளை வீசியது

    • பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது. மேலும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

    இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொனசன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, "பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கினோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானுக்குள் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறும்போது, "இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

    தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார்.

    அதேவேளையில் பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×