search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flooding"

    • மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல் போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஊராட்சியில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடந்தது. தமிழ்நாடு போிடா் மேலாண்மை ஆணையம், திருவாருா் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தேவகி துரையரசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எடையூர் மணிமாறன், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி தாசில்தாா் மலா்க்கொடி தொடங்கி வைத்தாா். எடையூா் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா், திருத்துறைப்பூண்டி வட்டவழங்கல் அலுவலா் அலெக்சாண்டா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கவுரி, முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    வெள்ளத் தடுப்பு மீட்பு பயிற்சி பெற்ற பாரதமாதா சேவை நிறுவன சமூகப் பணியாளர்கள் துர்கா தேவி, கார்த்தி, பிரபுதாசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எடையூாில் கடந்த ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, ரெட்கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவை நிறுவனம், வருவாய் துறை, சுகாதாரத்துறை, நீா்பாசன துறை, மீன்வளத்துறை, ஊரக வளா்ச்சி துறை, மின்சார வாாியம், தேசிய போிடா் மீட்பு குழு இணைந்து முன்னெச்செரிக்கை செய்தல், மக்களை மீட்டு முகாமகளில் தங்கவைத்து உணவு, மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல், போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    • கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது.
    • பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கர்நாட காவிலும் இந்த மழை பெய்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கட்டு வேகமாக நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த உபரி நீர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக மாறங்கியூரில் உள்ள கோரை ஆறு தரைப் பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் கோரை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமானது. இந்த பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் காலையிலே சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் உடைந்த பாலம் குறித்தும் அதனை சீர் செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொது மக்கள் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டாம் என பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். 

    பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னை, மேல்பாடி தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்தும் மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் பொன்னை ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பொன்னை அருகே ஆற்றில் வெள்ளம் செல்வதை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பொன்னை ஆற்றை ஆய்வு செய்தார்.

    பொன்னை ஆற்றிலிருந்து 60 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் நேற்று அதிகாலை சுமார் 1 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்றின் கரையோரம் 100 நபர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகளும் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று அதிகாலை பொன்னை அருகே உள்ள பொன்னையாற்றின் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடி உயர அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் பொன்னை போலீசார் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் இத்தரை பாலத்தின் 5-வது கண்ணுக்கு அருகில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது..

    மேலும் மேல்பாடி அருகே உள்ள பொன்னையாற்று பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்க உதவும் மேல்பாடி தரைப்பாலத்தின் மீதும் பாலமே தெரியாத அளவில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பாலத்திலும் வெள்ளப் பெருக்கு காரணமாக, உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னை அருகே இரும்புக் கூரை போட்ட பழைய இரும்பு கடை சாய்ந்து விழுந்தது. இதேபோல் பொன்னை- லாலாபேட்டை சாலையில், கீரைசாத்து அருகே சென்ற ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அமைச்சர் துரைமுருகன் நேற்று திருவலம் அருகே பொன்னை ஆற்றில் வெள்ளம் செல்வதை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #Nallathangalodai
    பழனி:

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள நீர் நிலைகள் மட்டுமின்றி பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

    முதலில் வரதமா நதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து பாலாறு-பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் கோடை கால நீர் தேக்கம், குதிரையாறு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனியை அடுத்துள்ள கோம்பை பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காட்டாற்று வெள்ளம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் வெள்ளம் வந்ததை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். பாலத்தை கடந்த செல்பவர்கள் எச்சரிக்கையுடன செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    இரவு முழுவதும் நீடித்த மழை காலையில் ஓய்ந்தது. அதன் பிறகே வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீண்டும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.

    எனவே இப்பாலத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Nallathangalodai
     


    தமிழகத்தில் வரும் 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள நிலையில் 4399 இடங்களில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #TNRain #TNRedAlert
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வரும் 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச்செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் கூறியதாவது:-

    மிக, மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. 24.5 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் அது ரெட் அலர்ட் எனப்படும். தமிழ்நாடு முழுவதும் 25 செ.மீ. மழை பெய்யும் என்று எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.



    சில இடங்களில் மட்டுமே மிக, மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே ரெட் அலர்ட் பற்றி பொதுமக்கள் பயப்படவோ அல்லது பீதி அடையவோ தேவை இல்லை. என்றாலும் மக்களின் நலன் கருதியே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பலத்த மழை பெய்யும் போது எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மிக பலத்த மழை பெய்யும் போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளோம். முன்பு நடந்த பாதிப்பு பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 4399 இடங்களில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கண்டு பிடித்துள்ளோம். இதில் 578 இடங்களில் மிக பலத்த பாதிப்பு ஏற்படக்கூடும். 892 இடங்களில் அதிகபட்ச பாதிப்பும், 1206 இடங்களில் மிதமான பாதிப்பும், 1723 இடங்களில் குறைவான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    7-ந்தேதி மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு உடனுக்குடன் உதவிகள் செய்ய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1275 போலீசார் கொண்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கடலோர மாவட்டங்களில் 80 பேருக்கும், பிற மாவட்டங்களில் 60 பேருக்கும் மீட்புப் பணிக்கான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் 692 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கலெக்டர்கள் மேற்பார்வையில் இயங்கும் இந்த குழுக்கள் மூலம் உடனுக்குடன் உதவிகள் செய்யப்படும். இந்த குழுக்கள் நாளை (சனிக்கிழமை) முதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு சென்று முகாமிட்டு பணிகளை மேற்கொள்ளும்.

    692 குழுக்களிலும் 30 ஆயிரத்து 759 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்களை மீட்க ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மழை அளவு அதிகரிக்கும் போது நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை திறக்கவும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

    அதுபோல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #TNRain #TNRedAlert
    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் சிறுமுகை அருகே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் மட்ட மேம்பாலம் மூழ்கியது.
    மேட்டுபாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 10-ந்தேதி அணைக்கு அதிக பட்சமாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியும், குறைந்த பட்சமாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 4,656 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்ட உயரம் 91.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 4,869 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின்நீர் மட்ட உயரம் 96.13 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5,505 கன அடி தண்ணீர் வெளியேற்ற படுகிறது.

    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் தேங்கி வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகின்றது. நீர்தேக்க பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் வழியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்ட பாலம் சிறிது சிறிதாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கி உள்ளது .

    பாலத்தின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருந்த தண்ணீர் சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது பாலத்தின் மேல் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டது. 20 அடி உயரமுள்ள பாலத்தை மூழ்கிய படி தண்ணீர் செல்கிறது. தண்ணீரில் மூழ்கிய வாழைகள் அழுகி காணப்படுகின்றன.

    உயர் மட்டப்பாலம் முழுவதும் மூழ்கி விட்டதால் காந்த வயல் பகுதியில் உள்ள காந்தவயல், காந்தையூர் உளியூர், ஆளூர் ஆகிய 4 கிராம மக்கள் போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பாலத்தின் மீது பஸ், லாரி, டெம்போ மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.#tamilnews
    மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அம்பை:

    தென் மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது. வெளியூர்களில் இருந்து மணிமுத்தாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர். 
    திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூரிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கழிவு நீருடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மாள் தடுப்பணை, ராயபுரம் தடுப்பணை, அணைக்காடு மண்ணரை தடுப்பணை, காசிபாளையம் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆனைமேடு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருபுறமும் பொதுமக்கள் நுழைந்து விடாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

    வருவாய்த்துறையினர் 24 மணிநேரமும் நொய்யல் ஆற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

    பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிரவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதே போல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள காந்த வயலில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப்பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்து உள்ளது. நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் இன்று ரம்யமான சூழல் இருந்து வருகிறது.


    நேற்று மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழையினால் மீண்டும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு விடிய விடிய மழை நீடித்ததால் இன்றும் 3-வது நாளாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    திருக்குறுங்குடி மலையில் புகழ்பெற்ற நம்பி கோவில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் வழிபட செல்வது வழக்கம். இதற்காக ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நம்பியாற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நம்பி கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். தகவலறிந்து நாங்குநேரி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று பக்தர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து நம்பிகோவிலில் இருந்த மற்ற பக்தர்களும் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.

    நேற்று காலை வெள்ளம் குறைந்த நிலையில் நேற்று மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழையினால் மீண்டும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு விடிய விடிய மழை நீடித்ததால் இன்றும் 3-வது நாளாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    தொடர் மழை பெய்து வருவதால் களக்காடு பகுதியில் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக பெரிய குளமான திருக்குறுங்குடி குளத்துக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதனால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தாமரை குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    அந்த குளத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர அந்த பகுதியில் உள்ள மேலும் 40 குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தொடர் வெள்ளம் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மலைப்பகுதியில் மழை குறைந்து வெள்ளம் தணிந்தவுடன் தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். மலையில் ஜீப்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 23.4 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கன்னியாகுமரி, சாமித்தோப்பு, கொட்டாரம், பொற்றையடி பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடைவிடாது கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக இதமான குளிர்க்காற்றும் வீசி வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

    பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு கீழ் செல்லும் சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.70 அடியாக இருந்தது. அணைக்கு 477 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.15 அடியாக உள்ளது. அணைக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 52 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு 53.81 அடியாக உள்ளது. அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-14, பெருஞ்சாணி-10.2, சிற்றாறு-1-20.2, சிற்றாறு-2-3, புத்தன் அணை-12.8, முள்ளங்கினா விளை-11, கோழிப்போர் விளை-4, திற்பரப்பு-14.2, குருந்தன்கோடு-2.8, ஆணைக்கிடங்கு-5, நாகர் கோவில்-3.4, பூதப் பாண்டி-3.6, கன்னிமார்-21.4, சுருளோடு-11.4, பால மோர்-23.4, மயிலாடி-4.8, கொட்டாரம்-10.4.
    ×