search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7ந்தேதி ரெட்அலர்ட் - தமிழகத்தில் 4399 இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு
    X

    7ந்தேதி ரெட்அலர்ட் - தமிழகத்தில் 4399 இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு

    தமிழகத்தில் வரும் 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள நிலையில் 4399 இடங்களில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #TNRain #TNRedAlert
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வரும் 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச்செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் கூறியதாவது:-

    மிக, மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. 24.5 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் அது ரெட் அலர்ட் எனப்படும். தமிழ்நாடு முழுவதும் 25 செ.மீ. மழை பெய்யும் என்று எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.



    சில இடங்களில் மட்டுமே மிக, மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே ரெட் அலர்ட் பற்றி பொதுமக்கள் பயப்படவோ அல்லது பீதி அடையவோ தேவை இல்லை. என்றாலும் மக்களின் நலன் கருதியே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பலத்த மழை பெய்யும் போது எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மிக பலத்த மழை பெய்யும் போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளோம். முன்பு நடந்த பாதிப்பு பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 4399 இடங்களில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கண்டு பிடித்துள்ளோம். இதில் 578 இடங்களில் மிக பலத்த பாதிப்பு ஏற்படக்கூடும். 892 இடங்களில் அதிகபட்ச பாதிப்பும், 1206 இடங்களில் மிதமான பாதிப்பும், 1723 இடங்களில் குறைவான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    7-ந்தேதி மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு உடனுக்குடன் உதவிகள் செய்ய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1275 போலீசார் கொண்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கடலோர மாவட்டங்களில் 80 பேருக்கும், பிற மாவட்டங்களில் 60 பேருக்கும் மீட்புப் பணிக்கான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் 692 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கலெக்டர்கள் மேற்பார்வையில் இயங்கும் இந்த குழுக்கள் மூலம் உடனுக்குடன் உதவிகள் செய்யப்படும். இந்த குழுக்கள் நாளை (சனிக்கிழமை) முதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு சென்று முகாமிட்டு பணிகளை மேற்கொள்ளும்.

    692 குழுக்களிலும் 30 ஆயிரத்து 759 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்களை மீட்க ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மழை அளவு அதிகரிக்கும் போது நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை திறக்கவும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

    அதுபோல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #TNRain #TNRedAlert
    Next Story
    ×