search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
    X
    நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    நம்பியாற்றில் 3வது நாளாக வெள்ளம் - வனப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழையினால் மீண்டும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு விடிய விடிய மழை நீடித்ததால் இன்றும் 3-வது நாளாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    திருக்குறுங்குடி மலையில் புகழ்பெற்ற நம்பி கோவில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் வழிபட செல்வது வழக்கம். இதற்காக ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நம்பியாற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நம்பி கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். தகவலறிந்து நாங்குநேரி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று பக்தர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து நம்பிகோவிலில் இருந்த மற்ற பக்தர்களும் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.

    நேற்று காலை வெள்ளம் குறைந்த நிலையில் நேற்று மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழையினால் மீண்டும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு விடிய விடிய மழை நீடித்ததால் இன்றும் 3-வது நாளாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    தொடர் மழை பெய்து வருவதால் களக்காடு பகுதியில் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக பெரிய குளமான திருக்குறுங்குடி குளத்துக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதனால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தாமரை குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    அந்த குளத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர அந்த பகுதியில் உள்ள மேலும் 40 குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தொடர் வெள்ளம் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மலைப்பகுதியில் மழை குறைந்து வெள்ளம் தணிந்தவுடன் தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். மலையில் ஜீப்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×