search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தையாறு மேம்பாலம் மூழ்கியது
    X
    கந்தையாறு மேம்பாலம் மூழ்கியது

    சிறுமுகை அருகே வெள்ள பெருக்கு- உயர் மட்ட மேம்பாலம் மூழ்கியது

    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் சிறுமுகை அருகே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் மட்ட மேம்பாலம் மூழ்கியது.
    மேட்டுபாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 10-ந்தேதி அணைக்கு அதிக பட்சமாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியும், குறைந்த பட்சமாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 4,656 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்ட உயரம் 91.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 4,869 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின்நீர் மட்ட உயரம் 96.13 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5,505 கன அடி தண்ணீர் வெளியேற்ற படுகிறது.

    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் தேங்கி வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகின்றது. நீர்தேக்க பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் வழியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்ட பாலம் சிறிது சிறிதாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கி உள்ளது .

    பாலத்தின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருந்த தண்ணீர் சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது பாலத்தின் மேல் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டது. 20 அடி உயரமுள்ள பாலத்தை மூழ்கிய படி தண்ணீர் செல்கிறது. தண்ணீரில் மூழ்கிய வாழைகள் அழுகி காணப்படுகின்றன.

    உயர் மட்டப்பாலம் முழுவதும் மூழ்கி விட்டதால் காந்த வயல் பகுதியில் உள்ள காந்தவயல், காந்தையூர் உளியூர், ஆளூர் ஆகிய 4 கிராம மக்கள் போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பாலத்தின் மீது பஸ், லாரி, டெம்போ மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.#tamilnews
    Next Story
    ×