search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood warning"

    டி.என்.பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Dam #Floodwarning

    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி விளாங்கோம்மை, மல்லியம்மன் துர்க்கம், கம்மனூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது.

    எனவே உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வினோ பாநகர், கொங்காரபாளையம், தோப்பு, கோவிலூர் வாணிப்புத்தூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் கால்நடைகள் மேய்க்கவோ. வேறு தேவைகளுக்காகவோ யாரும் இறங்க வேண்டாம் என்றும், கரையோரம் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குண்டரிப்பள்ளம் அணை தூர் வாரப்படாததால் அணையில் அதிகளவு நீர் தேக்கமுடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வீணாக பவானி ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் உபரிநீர் ஓடையில் 2 அல்லது 3 தடுப்பணைகள் கட்டவேண்டும் என்றும் அவ்வாறு கட்டினால் வீணாக பவானி ஆற்றில் கலக்கும் தண்ணீரை அதிகளவு சேமிக்க முடியும் என்றும் அவ்வாறாக சேமிக்கும் பட்சத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #Dam #Floodwarning

    வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், வைகை நதிக்கரையோரம் வாழும், மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    மதுரை:

    கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அதே போல், கேரள மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதையடுத்து தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று அதிகாலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. அதன் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்கும்பட்சத்தில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.

    வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமித்து வைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #Thamirabaraniriver #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பியுள்ளன.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.85 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 79 அடியாக இருந்தது. இன்று 81.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. எனினும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வரும் காட்டாற்று வெள்ளம் அதிகமாக வருகிறது.

    வடக்கு பச்சையாறு அணை 14 அடியாகவும், நம்பியாறு அணை 20.6 அடியாகவும் இருந்துள்ளன. அணைகள் நிரம்பியதால் அங்கு வரும் தண்ணீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையினால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்து பாய்ந்தோடும் வெள்ளம்

    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 3-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் கரையோர மண்டபங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் தைப்பூச மண்டபம் ஆகியவற்றையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    நெல்லையில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்டும் பணி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கரையோரம் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

    மணிமுத்தாறு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும், கல்யாண தீர்த்தத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பாபநாசம் சோதனைச்சாவடி இன்றும் மூடப்ப‌ட்டு உள்ளது.

    அடவி நயினார் அணையில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அந்த பகுதிகளிலுள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் மேக்கரை நீர்தேக்கத்தின் நீர் அப்படியே வெளியேற்றபப்டுவதால் பண்பொழி, கடையநல்லூர் சாலையிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை,காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பே நிரம்பி வ‌ழிகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 76 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் அடவிநயினார் அணை பகுதியில் 68 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டையில் 66 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நேற்று 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணையில் 18 மில்லிமீட்டர், ராமநதி அணையில் 10 மில்லிமீட்டர், கருப்பாநதி அணையில் 8 மில்லிமீட்டர், சேர்வலாறு அணையில் 7 மில்லிமீட்டர், சங்கரன்கோவிலில் 3 மில்லிமீட்டர், அம்பையில் 2.4 மில்லிமீட்டர், ஆய்க்குடி, சிவகிரியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை குறைந்தாலும் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, பாவூர் சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை, பணகுடி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    எனினும் வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களில் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் குளங்கள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்று பாலங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Thamirabaraniriver #Papanasamdam

    வைகை அணை 67 அடியை எட்டியுள்ளதால் மதுரை உள்பட 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை இன்று விடப்பட்டுள்ளது. #SouthWestMonsoon

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 8 கி.மீ தூரத்தில் வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் ஆண்டிப்பட்டி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெறுகிறது.

    72 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வருசநாடு, மேகமலை, மூலவைகையாறு வழியாகவும், பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் நிரம்புகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இன்று 3-வது நாளாக 142 அடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    பெரியாறு அணைக்கு வரலாற்றில் முதல்முறையாக 25,733 கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தமிழகபகுதிக்கும், 23,000 கனஅடிநீர் இடுக்கி அணைக்கும் வெளியேற்றப்படுகிறது. தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியுள்ளது.

    வழக்கமாக 67 அடியை தொட்டதும் முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 69 அடி எட்டியதும் 2-வது கட்ட எச்சரிக்கையும், 70-அடி வந்ததும் 3-வது வெள்ளஅபாய எச்சரிக்கையும் விடப்படும். இன்று காலை 67 அடியை தாண்டியுள்ளதால் முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இன்னும் இரண்டொரு நாளில் வைகை அணை முழுகொள்ளளவை எட்டிவிடும். எனவே மதுரை உள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. #SouthWestMonsoon

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். #kollidamriver
    திருச்சி:

    காவிரியில் வெள்ள அபாயத்தை தடுக்க திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் நேற்று 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து காவிரி ஆற்றில் 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டது. திருச்சியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கலெக்டர் ராசாமணி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் திருச்சி காவிரி ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தற்போது 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 30,067 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 29,952 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின் காவிரியில் தண்ணீர் குறைவாக வந்ததால் மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு உபரிநீர் திறப்பு கடந்த 31-ந்தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடை போல ஓடியது. மணல் திட்டுக்களும் தெரிய ஆரம்பித்தன. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1.30 லட்சம் கன அடி தண்ணீர் இன்று இரவு திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடையும். இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரவு முதல் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி செயலர் மூலமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொட்டியம், முசிறி காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கூடுதல் தண்ணீரால் காவிரியில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது. அதன்படி வாய்க்கால் மூலம் 75 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதுவரை 35 ஏரி, குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 ஏரி, குளங்களில் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படும். ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதால் 2 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும். கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் ணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் இன்று காலை நிலவரப்படி கரூர் மாவட்ட எல்லையான மாயனூர் கதவணைக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இன்று மதியம் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாயனூர், லாலாப்பேட்டை காவிரி கரையோர பகுதி மக்கள் வெளியேறுமாறு தண்டோரா மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். #kollidamriver
    மேட்டூர் அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் சீறி பாயும் தண்ணீர்

    இன்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.08 அடியாக உயர்ந்தது.

    இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒகேனக்கலில் நேற்று மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கலில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க கரையோர கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல் ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பரிசல் மூலம் ஆற்றை கடந்து ஒகேனக்கலுக்கு வந்து அங்கிருந்து பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். வெள்ளப்பெருக்கு சீரடையும் வரை ஆற்றை கடக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #Metturdam #Cauvery

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்டோரா, ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் அங்கு மழை நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 52 ஆயிரத்து 606 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரத்து 938 கன அடி தண்ணீரும் ஆகமொத்தம் 78 ஆயிரத்து 544 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த மாதம் 17-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. அப்போது நீர்மட்டம் 40 அடியாக இருந்தது. அதன் பிறகு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்ததால் தினமும் 3 முதல் 6 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது.

    இதன் காரணமாக 37 நாட்களில் அணைநீர்மட்டம் 80 அடி உயர்ந்து நேற்று பகல் 12 மணி அளவில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று பிற்பகல் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரவு 9 மணி அளவில் 75 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரவு 10 மணி அளவில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

    அணையின் 16 கண் பாலம் வழியாக 57 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், அணை மின்நிலையம் மற்றும் சுரங்கம் மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 75 ஆயிரத்து 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 124 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை முதல் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை மற்றும் சுரங்கம் மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், 16 கண் மதகு வழியாக 43 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறங்களை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ள அபாயம் குறித்து 12 மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு இன்றி காவிரி ஆற்று படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அணையில் இருந்து வெளி யேற்றப்படும் நிரின் அளவு குறித்து அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    அபாயகரமான பகுதிகளில் நின்று செல்போனில் செல்பி எடுக்கக்கூடாது, குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கிவிடாத வகையில் பொதுமக்கள் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள புள்ளாகவுண்டம்பட்டி, கோணேரிப்பட்டி, அக்ரஹாரம், காவேரிப்பட்டி, உள்பட பலவேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நகராட்சி மண்டபம், மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சில குடும்பத்தினர் உடமைகளை எடுத்துக் கொண்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    மேட்டூர் அணை 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனல்மின் நிலையம் அருகே காவிரி கரையோரம் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் மாவட்டம், தவுட்டுப் பாளையம் காவிரி ஆற்றிற்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. காவிரியின் இரு கரையை ஒட்டி தண்ணீர் செல்கிறது. இதனால் பல மாதங்களாக காவிரி ஆறு வறண்டு இருந்த நிலையில் தண்ணீர் வந்திருப்பது பொதுமக்களின் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலத்தின் வழியாக சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து செல்பவர்களும், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நாமக்கல் நோக்கி செல்பவர்களும் வாகனங்களை நிறுத்தி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் மழை நீடித்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தண்ணீர் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வழியாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தின் அளவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி வரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இதில் ஒரு பகுதி கடலில் கலக்கும். காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் சுமார் 20 மாவட் டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இனிவரும் காலங்களிலாவது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Metturdam #Cauvery
    மேட்டூர் அணை நிரம்பியதால் ‘சம்பா பருவ நெல் சாகுபடி’ அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பின.

    இதையடுத்து இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை நிரம்பிய பிறகும் மழை நீடித்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் திருப்பி விடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 51 ஆயிரம் கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது.



    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 117.40 அடியாக உயர்ந்தது.

    அணைக்கு நேற்று 61 ஆயிரத்து 226 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது அதிகரித்து 68 ஆயிரத்து 489 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நீர்மட்டம் 119.41 அடியாக உயர்ந்தது. இன்று பிற்பகல் அல்லது மாலை அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    84 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 39-வது முறையாக இந்த ஆண்டு அணை நிரம்புவது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 19-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும் அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு 8 மணி முதல் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டூர் மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், அணையின் 16 கண் பாலம் வழியாக 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் இரவு 10 மணி முதல் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு பாசன கால்வாய்க்களில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் இது 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    அணையின் நீர் இருப்பை பொருத்து கால தாமதமாகவோ குறித்த காலத்திலோ தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்து மேட்டூர் அணை நிரம்பியதால் முன்னதாகவே கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும்.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே காவிரி கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு 12 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான புள்ளாகவுண்டம் பட்டி, கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிப்பது, நீச்சல் அடிப்பது கரையில் நின்று வேடிக்கை பார்ப்பது, படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது உடமைகள், கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவிரி கரையோர கிராமப் பகுதிகளில் வருவாய்த்துறையினர் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்து வருகின்றனர். எடப்பாடி பகுதியில் உள்ள காவிரி கரையோர கிராமங்களான பூலாம்பட்டி, நெடுங்குளம், கூடக்கல், குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டுள்ளதோடு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோரம் வருவாய்த்துறையினரும், தீயணைப்பு துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    உபரி நீர் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் கருமலைக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 16 கண் பாலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு வருண பகவான் கருணை காட்டியதால் பலத்த மழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூலை மாதமே அணை நிரம்பி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 38 அடியாகத்தான் இருந்தது. நீர்வரத்தும் மிக குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக மிகவும் கால தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தான் அணையில் இருந்து தண்ணீரி திறக்கப்பட்டது. ஆனால் நீர்மட்டம் 100 அடியை கூட எட்டாததால் சென்ற ஆண்டு டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் சம்பா பருவ நெல் சாகுபடி அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். #Metturdam #Cauvery

    கர்நாடகத்தில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    சேலம்:

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

    மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.

    கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

    இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

    குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கும்.

    சீசன் காலங்களில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அப்போதே குற்றாலத்திலும் சீசன் ஆரம்பித்தது. சீசன் தொடங்கிய போது முதல் 3 நாட்கள் சாரல் மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழல் நிலவியது.
     
    அப்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயினருவி, ஐந்தருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்து வந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.

    இந்நிலையில் நேற்று குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது.

    இந்நிலையில் காலை 8 மணி அளவில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. 9 மணி வரை நீடித்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    இதனால் அருவியில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது சாரல்மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழலுடன் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கிறது.
    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை நீரையும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணி அளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தரைபாலம் மூழ்கி விட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது.



    ×