search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
    X

    காவிரியில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்டோரா, ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் அங்கு மழை நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 52 ஆயிரத்து 606 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரத்து 938 கன அடி தண்ணீரும் ஆகமொத்தம் 78 ஆயிரத்து 544 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த மாதம் 17-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. அப்போது நீர்மட்டம் 40 அடியாக இருந்தது. அதன் பிறகு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்ததால் தினமும் 3 முதல் 6 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது.

    இதன் காரணமாக 37 நாட்களில் அணைநீர்மட்டம் 80 அடி உயர்ந்து நேற்று பகல் 12 மணி அளவில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று பிற்பகல் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரவு 9 மணி அளவில் 75 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரவு 10 மணி அளவில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

    அணையின் 16 கண் பாலம் வழியாக 57 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், அணை மின்நிலையம் மற்றும் சுரங்கம் மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 75 ஆயிரத்து 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 124 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை முதல் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை மற்றும் சுரங்கம் மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், 16 கண் மதகு வழியாக 43 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறங்களை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ள அபாயம் குறித்து 12 மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு இன்றி காவிரி ஆற்று படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அணையில் இருந்து வெளி யேற்றப்படும் நிரின் அளவு குறித்து அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    அபாயகரமான பகுதிகளில் நின்று செல்போனில் செல்பி எடுக்கக்கூடாது, குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கிவிடாத வகையில் பொதுமக்கள் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள புள்ளாகவுண்டம்பட்டி, கோணேரிப்பட்டி, அக்ரஹாரம், காவேரிப்பட்டி, உள்பட பலவேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நகராட்சி மண்டபம், மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சில குடும்பத்தினர் உடமைகளை எடுத்துக் கொண்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    மேட்டூர் அணை 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனல்மின் நிலையம் அருகே காவிரி கரையோரம் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் மாவட்டம், தவுட்டுப் பாளையம் காவிரி ஆற்றிற்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. காவிரியின் இரு கரையை ஒட்டி தண்ணீர் செல்கிறது. இதனால் பல மாதங்களாக காவிரி ஆறு வறண்டு இருந்த நிலையில் தண்ணீர் வந்திருப்பது பொதுமக்களின் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலத்தின் வழியாக சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து செல்பவர்களும், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நாமக்கல் நோக்கி செல்பவர்களும் வாகனங்களை நிறுத்தி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் மழை நீடித்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தண்ணீர் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வழியாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தின் அளவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி வரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இதில் ஒரு பகுதி கடலில் கலக்கும். காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் சுமார் 20 மாவட் டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இனிவரும் காலங்களிலாவது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Metturdam #Cauvery
    Next Story
    ×