search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் சீறி பாயும் காட்சி
    X
    ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் சீறி பாயும் காட்சி

    மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் சீறி பாயும் தண்ணீர்

    இன்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.08 அடியாக உயர்ந்தது.

    இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒகேனக்கலில் நேற்று மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கலில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க கரையோர கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல் ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பரிசல் மூலம் ஆற்றை கடந்து ஒகேனக்கலுக்கு வந்து அங்கிருந்து பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். வெள்ளப்பெருக்கு சீரடையும் வரை ஆற்றை கடக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #Metturdam #Cauvery

    Next Story
    ×