search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Stand"

    • பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், மூன்று நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும்.

    இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள் திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அரசு பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

    • நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.
    • பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்துவிட்டு ரூ. 79 கோடியில் புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    கட்டுமான பணிகள்

    பல்வேறு பிரச்சினைகளை கடந்து அங்கு கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவுற்ற நிலையில், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பஸ் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக சுமார் 6 ஆண்டுகளாக சந்திப்பு பகுதியில் பஸ்களை உள்ளே இயக்க முடியாத நிலை இருந்தது.

    மாற்று ஏற்பாடாக தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    கமிஷனர் ஆய்வு

    இதனால் அப்பகுதி வியாபாரிகள் தச்சை மண்டல முன்னாள் சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சியை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பஸ் நிலையத்தை திறக்க கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாளை முதல்....

    இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி சந்திப்பு பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில வழித்தடங்களுக்கு டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது. இதற்காக ராஜா பில்டிங் சாலையில் கட்டுமான பணிக்காக சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு, சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக பொக்லைன் உதவியுடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் நாளை முதல் இங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தொடர்ந்து அடுத்த வாரத்தில் தென்காசி, கடையம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்திற்குள் செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பேருந்துகள் வந்து செல்லாததால் ஆலங்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
    • பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டது வீண்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆலங்குடி பேருந்து நிலையத்தில் கடைகள், பயணிகள் இருக்கை வசதி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. ஆனால் அதிகமான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. கறம்பக்குடி, வெட்டன் விடுதி, மழையூர் போன்ற பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை.

    அதே போல் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, பேராவூரணி, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பல பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பேருந்தில் ஏற முடியாது என்று பயணிகள் அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம் பஸ்ஸ்டாப் என கடும் வெயிலில் காத்திருந்து , அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

    இவ்வாறு பயணிகள் வேறு பகுதிகளுக்கு சென்று பேருந்துக்காக காத்திருப்பதால், ஆலங்குடி பேருந்து நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து இரவு பகல் எந்த நேரமும் அனைத்து பேருந்துகளும் ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரூர் பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் விரைந்து கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    • கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாநகரம் ஜவுளி ஏற்றுமதி, பஸ்கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தினமும் வேலை நிமித்தமாக பலர் கரூர் நகருக்குள் வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் மூலமாக கரூருக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    இதனால் நாளுக்கு நாள் கரூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டிற்கு முன்பு தற்போது கரூர் உழவர் சந்தை இருக்கும் இடத்தில் கரூர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட இட நெருக்கடியை கடந்த 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து தற்போது இயங்கி வரும் கரூர் பஸ் நிலையத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது.

    நகர பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுவதால் நாளுக்கு நாள் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து சென்றது. இதில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள், பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் திருமாநிலையூர் பகுதியில் கரூர் புதிய பஸ் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூர் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடப் பகுதிகள் பழுதடைந்து மேல் கூரைகள் அவ்வப்போது இடிந்து விழுந்து வந்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் இருந்த 22-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    கடந்த டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வருகின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் தற்போது வெயில் காலம் என்பதால் அங்கு நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு தற்போது கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே பயணிகளின் நலன் கருதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டி பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இட வசதி செய்து தர வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது செயல்பட்டு வரும் கரூர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்தில் மேல் கூரைகள் பழுதடைந்து அவ்வப்போது இடிந்து விழுந்தது. இதையடுத்து புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.8 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் ெதாடங்கப்படும், என்றார்.

    • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

    ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

    குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

    எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • தேவகோட்டையில் டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டையில் இருந்து கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்த மங்கலம், திருப்பாக் கோட்டை, ஆறாவயல், கண்ணங்குடி, சிறுவாச்சி, உஞ்சனை, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    கிராம பகுதி மக்கள் தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று 9 டவுன் பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் பல மணி நேரமாக தேவகோட்டை பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகினர். சிலர் ஆபத்தான நிலையில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பெரும்பாலான டவுன் பஸ்களின் டயர் மோசமான நிலையில் உள்ளன. தரம் குறைந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது இந்த டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு டவுன் பஸ்களின் அவல நிலையை வீடியோவாக அரசு பஸ் டிரைவர் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து 9 டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

    பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பஸ் நிலையத்தை முழுவது மாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டு வதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிகள் முழு வடிவம் பெறும்போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிவறை, பொது மக்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் அமையும்.

    நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. வைகை அணையில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைய உள்ளது.

    புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப் பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது. தீவிர முயற்சி எடுத்த மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், நல்ல நிர்வாகத்தை வழங்கி கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லாமல் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப் பிரகாசம், நகர் மன்ற துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் முரளி,

    தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலா ளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர், சோலையப்பன், கவுன்சிலர்கள் மணி முருகன், இளங்கோ, டுவிங்ளின் ஞான பிரபாகரன், கலைவாணி, இளங்கோ, ஜெய கவிதா சிவகாமி, அல்லிராணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெளி மாவட்ட பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது.

    இதன் காரணமாக காலை முதல் இரவு வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏழை எளிய மக்கள் தாகத்தோடு திரும்பி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் குடிநீரின் பங்கு முக்கியமானதாகும்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு தண்ணீர் வழங்கக்கூடிய எந்திரம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கோடை வெப்பம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் உடலின் இயக்கத்திற்கு தண்ணீரின் பங்கு முக்கியமானதாகும்.அதை உணர்ந்தாவது நிர்வாகம் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முன் வர வேண்டும்.

    அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தண்ணீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்தும் காட்சி பொருளாகவும் மாறி வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மதுரை

    மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் கே.கே.நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்  அண்ணாநகரில் பகுதி செயலாளர் அக்ரி கே.பி.டி.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 

    இக்கூட்டத்தில் 10 வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.


    இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-


    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (3-ந் தேதி) அனைத்து வட்டங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கலைஞர் பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். இதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 


    மதுரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நகர் கே.கே.நகர் என அழைக்கப்படுகிறது. இதற்கு அரசாணை பெற வேண்டும். 


    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கலைஞர் ரெயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மதுரை வேளாண்  கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தும் போது அதற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சேலம் புதிய பஸ் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது பஸ் சக்கரம் ஏறி பரிதாப இறந்தார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அந்த பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (வயது 70)என்பவர் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில்  தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்து திடீரென பின்னால் இயக்கப்பட்டது. இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வராஜ் காலின் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிய தர்மபுரியை சேர்ந்த பச்சமுத்து (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×