search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk alliance"

    அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தென்காசி தொகுதியில், கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    மீதமுள்ள 20 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று காலை அறிவித்தார். அதன்படி, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் உத்தேசி தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.,புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன.

    அ.தி.மு.க.- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வருமாறு:-

    அ.தி.மு.க.

    1. தென்சென்னை

    2. திருவள்ளூர்

    3. காஞ்சிபுரம் (தனி)

    4. திருவண்ணாமலை (தனி)

    5. சேலம்

    6. நாமக்கல்

    7. ஈரோடு

    8. திருப்பூர்

    9. நீலகிரி (தனி)

    10. பொள்ளாச்சி

    11. கிருஷ்ணகிரி

    12. திண்டுக்கல்

    13. கரூர்

    14. பெரம்பலூர்

    15. சிதம்பரம் (தனி)

    16. நாகப்பட்டினம் (தனி)

    17. மயிலாடுதுறை

    18. மதுரை

    19. தேனி

    20. திருநெல்வேலி

    பா.ஜனதா

    1. ராமநாதபுரம்

    2. கன்னியாகுமரி

    3. தூத்துக்குடி

    4. கோவை

    5. சிவகங்கை

    பா.ம.க.

    1. மத்திய சென்னை

    2. ஸ்ரீபெரும்புதூர்

    3. அரக்கோணம்

    4. தர்மபுரி

    5. ஆரணி

    6. விழுப்புரம் (தனி)

    7. கடலூர்

    தே.மு.தி.க.

    1. வடசென்னை

    2. கள்ளக்குறிச்சி

    3. திருச்சி

    4. விருதுநகர்

    புதிய தமிழகம்

    1. தென்காசி

    த.மா.கா.

    1. தஞ்சாவூர்

    புதிய நீதிக்கட்சி

    1. வேலூர்

    என்.ஆர்.காங்கிரஸ்

    1. புதுச்சேரி  #LSPolls #ADMK #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. இதற்கான கூட்டணி உடன்பாடு இன்று மாலை கையெழுத்தாகிறது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியூரில் இருப்பதால் இன்று காலை கையெழுத்தாகவில்லை.



    இன்று மதியம், ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மயிலாடுதுறை தொகுதி த.மா.கா.வுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜி.கே.வாசன் கையெழுத்திடுவதன் மூலம் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் முதல் முறையாக இணைகிறார். இதனால் இந்த கூட்டணியில் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் அவர்களின் முடிவை பொறுத்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #LSPolls #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    த.மா.கா. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை ஜி.கே.வாசன் இன்று கூட்டியுள்ளார். மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர் பொதுச்செயலாளர் ஞானசேகரன், செயலாளர்கள் எம்.டி.எஸ்.சார்லஸ், சக்திவேல், ரெங்கராஜன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜி சாக்கோ, அண்ணா நகர் ராம்முகர், அருண் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம் அதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாமும் தனித்து போட்டியிடலாம் என்ற கருத்தை சிலர் முன்வைத்தனர்.

    இன்னும் சிலர் கூறும் போது, ‘‘நாம் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருந்தும் கூட்டணிக்காக பா.ஜனதாவை ஆதரிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் தான் நமக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும்’’ என்றனர்.

    சிலர் பேச்சுவார்த்தையின் நிலவரங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்கள் மத்தியில் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘உங்கள் உணர்வுகளும், ஆதங்கமும் எனக்கு புரிகிறது.



    அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். எனவே நிர்வாகிகள் வேறு எந்த மாறுபாடான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TamilMaanilaCongress #GKVasan #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று 2-வது நாளாக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.

    முதல் நாளான நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

    2-வது நாளான இன்று 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. காலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

    மாலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #LSPolls #ADMK
    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

    இதில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதி, பா.ம.க.வுக்கு-7, தே.மு.தி.க-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக்கட்சி-1, என்.ஆர்.காங்கிரசுக்கு-1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்று உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனாலும் தொகுதிகள் விவரத்தை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் நேர்காணல் நிகழ்ச்சி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



    இதில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    1. மத்திய சென்னை, 2, ஸ்ரீபெரும்புதூர், 3.ஆரணி, 4. அரக்கோணம், 5.சிதம்பரம், 6.தர்மபுரி, 7.திண்டுக்கல்.

    தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :-

    1. வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருதுநகர்.

    புதிய தமிழகம்- தென்காசி. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு 13-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMDK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. #LSPolls #DMDK
    ரூ.1000, ரூ.2000, ரூ.6000 ஆகிய 3 அணுகுண்டு போன்ற திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #LSPolls #TNMinister #SellurRaju
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் ஆகும். எனவே நாம் தேர்தல் பணிகளை முழுவீச்சாக செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகும் வகையில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    பொங்கலுக்கு அனைவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இந்த திட்டம் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #SellurRaju
    நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முடிவுகள் தெரிந்துவிடும் என அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார். #Thangamani #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிகவின் வருகைக்காக காத்திருப்பதால் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவின் வருகை குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு, தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.



    இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி, நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவுகள் தெரிந்துவிடும் என்றார்.

    “அரசியல் காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்மையான விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாக போராட்டம் உள்ளது. உயர் மின்கோபுர பிரச்சினை தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். #Thangamani #ADMKAlliance

    அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும், கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.



    பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும்.  கூட்டணி கட்சியினரும் கவனமான இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.

    த.மா.கா.வுக்கு ஒரு இடம் தருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த கட்சி வந்தால் அதற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்த கூட்டணி முடிவானால் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் 2 நாளில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டு விடும் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    ×