search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்- தேமுதிகவுக்கு அதிமுக நெருக்கடி
    X

    நாளைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்- தேமுதிகவுக்கு அதிமுக நெருக்கடி

    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    Next Story
    ×