search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrorists"

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர்.
    • 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ் பயணிகள் 9 பேரை கடத்திச் சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர். அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.

    அதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர்.
    • நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் நேற்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    இதற்காக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர்.

    இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பெயர் முகமது ஷாநவாஸ் ஆலம், முகமது ரிஸ்வான் அஸ்ரப், முகமது அர்ஷத் வர்சி என்று தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.

    இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்தவர். இவர் சுரங்க என்ஜினீயர் என்பதால் அவருக்கு குண்டு வெடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்துள்ளது. அவரது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்.

    முகமது அர்ஷத் வர்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பி.டெக். முடித்து உள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பி.எச்.டி. பட்டத்தையும் பெற்றுள்ளார்.

    முகமது ரிஸ்வான் அஸ்ரப் கணினி அறிவியலில் பிடெக் படித்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்தவர். மதகுருவாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

    இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் என்பவர் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். மற்ற இருவரும் அவரது கூட்டாளிகள் ஆவர். இந்நிலையில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் மூத்த அதிகாரி எச்.ஜி.எஸ். தலிவால் கூறியதாவது:-

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர்களில் மிக முக்கியமானவர் முகமது ஷாநவாஸ் ஆலம். இவரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஸ்ரப் லக்னோவிலும், முகமது அர்ஷத் வர்சி உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஜூலை மாதம் புனேயில் நடந்த சோதனையின் போது முகமது ஷாநவாஸ் ஆலமை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே அவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.

    டெல்லியில் முகமது ஷாநவாஸ் ஆலம் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், ரசாயன பொருட்கள், ரிமோட்டுகள், பேட்டரிகள், டைமர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜிகாதி இலக்கிய புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நன்கு தெரிந்த இடங்களை குறிவைத்து தாக்கி அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. பண்டிகை காலங்களில் அவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க அயோத்தி, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர். இதற்காக இறுதிகட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் அக்ஷர்தாமையும், மும்பையில் சபாத் ஹவுசையும் குறிவைத்து இருந்தனர்.

    கைதான 3 பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், வழக்கமான தகவல்களை அந்த அமைப்புடன் பகிர்ந்து வந்ததும் கண்டறியப் பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயெ வழங்கவும் ஐஎஸ் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் இவர்கள் டெல்லியை தவிர உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மகராஷ்டிராவிலும் முகாம்களை கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    • அறிவிக்கப்பட்ட, தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கம்

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ''இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

    டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது.

    மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ''ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்'' என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.

    • அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சர்க்கஸ் கலைஞர் தீபு என்பவர் அனந்த்நாக்கில் உள்ள கேளிக்கை பூங்காவில் தனியார் சர்க்கஸ் மேளாவில் வேலை பார்த்து வந்தார்.

    உதம்பூரை சேர்ந்த தீபு நேற்று மாலை அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.

    இதையடுத்து, தீபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    • ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.
    • ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது.

    ஜம்மு:

    ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.

    பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது.

    குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?

    இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
    • பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

    ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக

    காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    • ஐம்முகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்.
    • பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை தேடி வந்தனர்.

    சோபூர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

    ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.

    மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம்.
    • காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு.

    சோட்டி போரா: 

    ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


    இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

    • கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க நேற்று கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மாறுவேடத்தில் வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சாகர்கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை மற்றும் கடத்தலை தடுக்க நேற்று காலை கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இன்று இராண்டாவது நாளாக ரோந்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்பணியில் இன்று கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நிரிலும், நிலத்திலும், செல்ல கூடிய ரோவர் படகு கோடிக்கரைக்கு வந்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளும் தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது

    இராண்டாவது நாள் பயிற்சி ஒத்திகையில் வேதா ரண்யம் இன்னல்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி சுரேஷ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் ஏட்டு சசிகுமார்மற்றும் போலீசார் ஆறுகாட்டுதுறை, கோடிக்கரை கடற்கரையில் புதிதாக யாரும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    பின்னர் படகுமூலம் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் .

    இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் போலீசார் மாறுவேடத்தில் கடலில் இருந்து கரைக்கு வருவார்கள் அவர்களை அடையாளம் கண்டு மறுவேடத்தில்வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.

    இந்த சாகார் கவாச் ஒத்திகை நிகழ்வில் வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலிசார் என 50 மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நேரத்தில் இராண்டாவது நாளாக கடலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்யும்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. இவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார். காந்தியின் மானசீக கொள்ளு பேரன் என்ற முறையில் நியாயம் கேட்க வந்துள்ளேன்” என்று கூறினார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது தமிழ்நாடு முழுவதும் 74 போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்றாலும் கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதனால் நேற்று அவரை நோக்கி செருப்பு, முட்டை, சாணம் போன்றவை வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய இருந்ததை போலீசார் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தடுத்து உள்ளனர்.

    கமல்ஹாசன் கோவை பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் அரவக்குறிச்சியில் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறீர்களே?

    பதில்:- ஆமாம். நான் சொன்னதில் தவறான கருத்து எதுவும் கிடையாது. அது பல வருடங்களாக சொல்லப்பட்டது. இப்போது அதை திடீரென்று கவனிப்பது அவர்களின் சவுகரியத்துக்காக கவனிப்பதுபோல் தோன்றுகிறது.

    இதே பரப்புரையை நான் மெரினாவில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு சொல்லி இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தின்போது மெரினா கடற்கரையில் இதே கருத்துகளை இதே வி‌ஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன்.

    அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் எது கிடைக்கிறதோ அதை பிடித்துக் கொண்டு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மெரினாவில் நான் பேசியபோது எல்லா மதத்தினரும் இருந்தனர்.

    கேள்வி:- உங்கள் கருத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதானே அவர்களின் கருத்து?

    பதில்:- உருவாக்கினார்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. உருவாகவில்லை. 3 நாட்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் இவர்கள் உருவாக்கி விட்டதுதானே தவிர வேறொன்றும் இல்லை.



    பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பதில் சொல்வதற்கு சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

    கேள்வி:- இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்:- தாக்குதல் அவர்கள் மீது நடக்கவில்லையே. அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கேள்வி:- உங்கள் பேட்டியில் நீங்கள் ஊடகங்களை குறை சொல்லி இருக்கிறீர்களே?

    பதில்:- என்னை குறை சொல்லும்போது நானும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டி இருக்கிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டீர்களேயானால் யாரும் யாரையும் திட்டுவது மாதிரி நாம் சித்தரித்து விட முடியும்.

    அதன் பிறகு அதை முழுதாக போட்டார்கள். அதை பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். பார்க்க முடியாதவர்கள், பார்க்க சகியாதவர்கள் அவர்கள் கூற்றை தொடர்ந்து பேசுவார்கள்.

    கட்சித் தலைவர்களோ, பிரசாரம் செய்பவர்களோ இனி இந்த வி‌ஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அதில் மடம் தலைவர்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் மடத்தின் தலைவர்கள் சிலர் பேசி இருக்கிறார்கள்.

    அதை தூண்டி விடுபவர்கள் என்று சொன்னால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதைச் செய்யவில்லை. நாங்கள் அமைதியை காப்பதற்கான எல்லா வேலையையும் செய்கிறோம்.

    கேள்வி:- மத நல்லிணக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் யாருமே உங்கள் கருத்தை ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அப்படியா? அவர்களுக்கு அஜெண்டா இருக்கிறது. அதனால் ஆதரிக்காமல் இருந்து இருக்கலாம்.

    கேள்வி:- ஓராண்டுக்கு மேல் தீவிர அரசியலில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை பேசிய பிறகுதான் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறீர்களே?

    பதில்:- நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்து விட்டோம் என்று சொன்னேன். அதை போன வருடத்தில் இருந்து என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    கேள்வி:- பா.ஜனதா சார்பில் காவல் நிலையங்களில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் கைதுக்கு பயப்படுகிறீர்களா?

    பதில்:- கைதுக்கு பயப்படவில்லை. எனக்கு பிரசாரம் இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆவல்தான். கைது பண்ணட்டும். எனக்கு ஒன்றும் இல்லை. கைது செய்தால் இன்னும் பதட்டம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. அதை செய்யாமல் இருப்பது நல்லது.

    கேள்வி:- உங்கள் கருத்தை உங்கள் நண்பர்களும் திரையுலக சகாக்களும் ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஜனநாயக நாடு.

    கேள்வி:- கோட்சே பற்றி பேச வேண்டிய தேவை இப்போது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- கண்டிப்பாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள். மறுபடியும் காந்தியைப் பற்றி நல்ல நல்ல வி‌ஷயங்கள் வெளியே வருகிறது. அதை வெளிக்கொண்டு வரவும் சரித்திரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் சரித்திரத்தை நாம் நினைவு கொள்வது நல்லது.

    கேள்வி:- பிரசாரம் செய்யவிடாமல் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அரசியல் குறுக்கீடு எனக்கே இருக்கிறது. சூலூரில் எங்களுக்கு கடைசி நாள் பிரசாரம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான பிரசார நாள். அதை இவர்கள் காரணம் காட்டி தடை செய்து இருக்கிறார்கள். பதட்ட சூழல் அங்கே நிலவும் பட்சத்தில் ஏன் சூலூரில் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்பது எங்களுடைய பரிந்துரை.

    கேள்வி:- உங்கள் நாக்கு அறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

    பதில்:- அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    கேள்வி:- சோனியாகாந்தி வருகிற 23-ந்தேதி பா.ஜனதா அணியில் இல்லாத கட்சிகளை அழைத்துள்ளார். உங்களுக்கு அழைப்பு வந்ததா?

    பதில்:- எனக்கு அழைப்பு வரவில்லை. நான் இப்போது தான் ஊருக்கு வந்தேன்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படுகிறதே?

    பதில்:- இது முதல் முறை இல்லை. வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு கால கட்டங்களில் எனக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் தெளிவான போராட்டங்கள் இல்லை என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.

    கேள்வி:- கட்சிகளை தாண்டி இந்துக்களின் மனது புண்பட்டிருந்தால்?

    பதில்:- இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். மொத்தமாக நீங்கள் சொல்லக் கூடாது.

    அரசியலில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் புண்பட்டிருப்பார்கள். அரசியலில் இல்லாத மதம் சார்ந்தவர்கள் என்ன இப்படி சொல்லி விட்டார் என்று கொஞ்ச நேரம் யோசிப்பார்கள். புண்படுவது, கோபப்படுவது, தாக்கப்படுவது இதெல்லாம் தனிப்பட்ட அரசியல். சாதனங்களை கையில் எடுத்து விளையாடுகிறார்கள்.

    கேள்வி:- உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறீர்களா?

    பதில்:- இல்லை. நல்ல பாதுகாப்பு எனக்கு இருந்தது. இங்கு கூட பாதுகாப்பை மீறி எதுவும் செய்ய வேண்டும் என்றால் யாரும் செய்யலாம். இதை செய்வது பெரிய கூட்டம் என்றால் பதட்டப்பட வாய்ப்பு உண்டு. இதில் 2 பேர், 4 பேர் ஏவப்பட்டவர்கள்.

    கேள்வி:- உங்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அரசியலின் தரம் குறைந்து விட்டது. நாதுராம் கோட்சே பற்றி நான் சொன்ன கருத்துக்காக என்னை நோக்கி செருப்பு வீசியுள்ளனர். செருப்பு வீசுவதாலோ, கல் வீசுவதாலோ என்னை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது. மத நல்லிணக்கத்துக்காகவே நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தையும் நான் சமமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×