search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK"

    • கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான்.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கப்பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் விண்ணப்பித்திருக்கிறது. புதிய அணை கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான். முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கப்பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன.

    அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே இதுபோன்ற முயற்சிகளை கேரளம் மேற்கொள்கிறது.

    முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களையும் உள்வாங்கி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்வது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மாறாக, முல்லைப்பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்தத் தடையாக அப்பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட உடனடியாக அனுமதி அளிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்.
    • ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
    • 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது. முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டார். அதற்கு முன் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.

    அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ஆம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.

    அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான்.
    • உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான். தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது.

    எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.
    • நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.

    மனிதவாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான். எந்தவித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள் அவர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களை இந்த நாளில் வணங்குவோம்; நன்றி செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான்.
    • செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு, பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம்.
    • சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக்கூடாது. அடுத்த மாதமே துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.

    தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

    வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.
    • தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேர ளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்க ளிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்க ளும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
    • தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்
    • பழைய பேருந்துகளை பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

    திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×