search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mothers day"

    • பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.
    • கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையை சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார். இவர் ஐதராபாத்தில் தொழில் செய்து வருகிறார்.

    அனுசுயா தேவி தனது மகனை பாசத்துடன் வளர்த்தார். மேலும் தனது மகன் படிக்க கடுமையாக உழைத்தார். சரவணகுமாருக்கு தாய் அனுசுயா தேவி மீது அளவு கடந்த பாசம் உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு அனுசுயாதேவி உடல்நல குறைவு காரணமாக இறந்தார். தாய் இறந்தது முதல் சோகத்தில் ஆழ்ந்த சரவணகுமார் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தார்.

    கட்டிட கலை நிபுணர் பாலகம் சஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாண்டிதுரை, ஒடிசாவை சேர்ந்த கைவினைக் கலைஞர் சுரேஷ் ஆகியோருடன் தாய்க்கு ரூ.10 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டினார்.

    பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன. கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவிலில் படங்களுடன் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.

    அன்னையர் தினமான நேற்று கோவில் கருவறையில் தனது தாயின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

    சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர் கோவிலுக்கு சென்றனர்.

    தாய்க்கு ரூ.10 கோடியில் கோவில் கட்டிய சரவணக்குமாரை பாராட்டி சென்றனர்.

    • இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார்.
    • விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார்.

    அன்னையர் தினத்தையொட்டி இண்டிகோ விமான நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார். பின்னர் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார். தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும், அவர் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

    அவருக்கு முன்னால் நானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாக கூறி தனது அன்னைக்கு அன்பு முத்தம் கொடுக்கிறார். அப்போது அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது. நபிரா இந்த அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் ஆரவாரம் செய்து, கை தட்டி பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. ஏராளமானோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் தாயாரை அழைத்து வரச்செய்து கவர்னர் ஆர்.என்.ரவி பெருமைப்படுத்தினார்.
    • மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் தாயாரை அழைத்து வரச்செய்து கவர்னர் ஆர்.என்.ரவி பெருமைப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    குழந்தைகள், குடும்பம் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது.

    நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். எங்கிருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தாயை ஒதுக்கி விடாதீர்கள். அவர்களுடன் சகஜமாக பேசுங்கள். அதுவே தாய்க்கு சந்தோசத்தை தரும்.

    தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை. மொழி, கலாச்சாரம், கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே.

    மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கிறது. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனி டம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகிறது.

    ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது.

    கவர்னர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும் அன்னையர் தினத்தில் இங்கு வந்திருந்து பெருமைப்படுத்திய அன்னையர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

    • எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    • நெருக்கடியான காலக்கட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை.

    சென்னை:

    அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பாலைத்தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும், அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று, பெற்றவளின் மனம் குளிர கற்று, உற்ற துணையாய் முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து. செலுத்தும் நன்றி என்றார்.

    என் அம்மாவை வணங்கி எண்ணற்ற அம்மாக்களுக்கு என் வண்ணமயமான அன்னை தின வாழ்த்துக்கள்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை, கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித்தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-

    எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய அவசர கால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலக்கட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை. தமிழ்நாட்டு மக்களும், லட்சோப லட்சம் கழக கண்மணிகளுக்கும், பெற்றெடுக்காத தாயாக திகழ்ந்தவர் மறைந்த அம்மா. அவரது ஆட்சிக்காலத்தில் அன்னையர்களுக்காக பல நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி அனைவரின் அன்பை பெற்றவராக திகழ்ந்தார். அம்மா காட்டிய அன்பு வழியில் தாய்மார்களை நேசிக்கும், அரவணைக்கும் பண்பை நமக்குள் என்றென்றும் வளர்த்தெடுப்போம் என்று இந்த அன்னையர் தினத்தில் உறுதி ஏற்போம் என்றார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு, அறிவு, அனுபவம், தியாகத்தின் திருவுருவம் அன்னையர்களே, அவர்களை எந்நாளும் வணங்குவோம். குழந்தைகளை உலகிற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, அவர்களுக்கு அன்பு, அறிவு, தமது அனுபவத்தின் மூலம் கிடைத்த பாடம் ஆகியவற்றை வழங்கி, எண்ணற்ற ஈகங்களை செய்து சாதனையாளர்களாக மாற்றுவது அன்னையர் தான். அவர்களின்றி நாம் இல்லை. இந்த அடிப்படை உண்மையை மனதில் கொண்டு, எந்நாளும் அவர்களை வணங்குவோம், போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
    • அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!

    சென்னை:

    இன்று சர்வதேச அன்னையர் தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோபாலபுரம் சென்று, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் மனைவி துர்காவும் உடன் சென்றிருந்தார்.

    மகன் மு.க.ஸ்டாலினை கண்டதும் தயாளு அம்மாள் சந்தோஷ மிகுதியில் மு.க.ஸ்டாலினின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார். அதன் பிறகு சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அதன் பிறகு தனது தாயாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
    • தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.

    உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

    என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.

    பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.

    ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!

    உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!

    இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!

    "மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.

    வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.

    பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.

    இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"

    என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?

    நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,

    வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.

    எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    "பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!

    பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

    இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.

    வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.

    குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.

    அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினமான நேற்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.

    அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

    இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 
    சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினமான நேற்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.

    அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

    இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
    உலகம் முழுவதும் நாளை அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வாழும் தெய்வமாக விளங்கும் தாயாரை வணங்கி போற்றுவது அனைவரின் கடமை ஆகும். #MothersDay
    நாளை அன்னையர் தினம்.

    அம்மா! இந்த வார்த்தைக்கு இயற்கையை விட சக்தி அதிகம். அதனால் தான் அம்மாவைப் பற்றி எழுத யாரும் உள்ள உணர்ச்சிகளை எழுத்தாக்க வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகின்றோம்.

    இப்படிச் சொல்லலாமா! அம்மா நீங்கள் மகா சக்தி. நீங்கள் தெய்வம். வாழும் தெய்வம். நாங்கள் அன்றாடம் பார்க்கும் தெய்வம். உங்கள் அன்புக்கு ஏது அளவு? ஏது அளவு? இதற்கு சட்ட திட்டம் உண்டா என்ன? வரைமுறைகள், எல்லைக் கோடுகள் உண்டா என்ன? பட்டா தேவைப்படாத உங்களது பரந்த உலகம் எனக்கு மட்டுமே முழு சொந்தம். உலகில் மிகக் கடினமான பொறுப்பு தாயாய் இருப்பது தான். ஆனால் இதற்கு நீங்கள் யாருடைய பாராட்டையும் எதிர் பார்ப்பதில்லை. எங்களின் தோழி, வழிகாட்டி, குரு என எல்லாமே நீங்கள் தான். எதுவும் எதிர்பாராத அட்ஷய பாத்திரம் உங்கள் அன்பு.
     
    ஒவ்வொரு மனித ஜீவனும் தன் தாயைப் பற்றி இப்படித்தான் நினைப்பார்கள். இந்த ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இது அன்பு உலகம்.

    சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா உத்யோகம் தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார்.


    பெண் திருமணமானதும் நெற்றியில் இடும் குங்குமம் மாதா அன்னை பராசக்தியினைப் போல் படைக்கும் சக்தியினையும் பெற்று விட்டாய் எனக் கூறும் மங்கள அறிகுறி என ஆன்மீகம் கூறுகின்றது.

    ஒரு தாய் தன் பத்து மாத கர்ப்ப காலத்தினைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு ஒன்றினைப் பாருங்கள்.

    எந்த தாயும் ஒரு உயிர் தன் வயிற்றினுள் வளரும் காலத்தை மறக்கவே முடியாது.

    மாதம் 1 : எனக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. சிலருக்கு இருப்பது போல் காலையில் வயிற்றுப் பிரட்டல், வாந்தி என எதுவும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று என் வயிற்றில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. அதிகம் இனிப்புகள் சாப்பிட ஆசையாய் இருந்தது.

    மாதம் 2 : எனக்கு காலையில் வயிற்றுப் பிரட்டல் இருக்கலாம் என்றார்கள். நல்ல காலம் எனக்கு எதுவும் இல்லை. சென்ட், ஷாம்பூ இதன் வாசனைகள் பிடிக்கவில்லை. ஆகவே அவைகளைத் தவிர்த்தேன். அவ்வப்போது சோர்வு போல் இருந்தது. மனம் சற்று தளர்ந்தது. வயிற்றில் அவ்வப்போது உப்பிசம் ஏற்பட்டது. ஆகவே என் உணவு முறைகளில் அக்கறை காட்டினேன்.

    மாதம் 3 : உடல் இறுக்கமாய் இருந்தது. வயிறு உப்பிசம் மட்டும் கூடியது. மருத்துவ அறிவுரைகளை முறையாய் பின்பற்றினேன். மனச்சோர்வு அதிகம் ஏற்பட்டது. என் ஆடைகள் இப்பொழுது எனக்கு பொருத்தமாக இல்லை.

    மாதம் 4 : லேசாக வெளி தெரிந்த என் வயிற்றினைப் பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். என் சருமம் பளபளவென ஆனது போல் இருந்தது. எனக்கு ஒரே மகிழ்ச்சி, அடிக்கடி பசித்தது. இருவருக்காக சாப்பிடுகிறோம் எனத் தோன்றியது.


    மாதம் 5 : என் வயிறு பெரிதாகத் தெரிந்தது. இரவில் தூங்குவது கடினமாயிற்று. அதுவும் திரும்பி படுப்பது கடினமாக இருந்தது. ரொம்ப பசித்தது. அடிக்கடி சமையலறை சென்றேன். நான் உண்ணும் உணவின் அளவு எனக்கே ‘ஷாக்’ ஆக இருந்தது.

    மாதம் 6 : பசிதான். சோர்வு தான். நடக்க, படுக்க, உட்கார எல்லாமே கடினமாகத்தான் இருந்தது.

    மாதம் 7 : இரவில் அடிக்கடி பாத்ரூம் செல்ல நேர்ந்தது. படுக்கையில் எழுந்திருக்க சிரமப்படும் என்னைப் பார்த்து என் கணவர் சிரிப்பார். நான் எழுந்திருக்க கைபிடித்து உதவ ஆரம்பித்தார். நான் அன்றாடம் செய்யும் சாதாரண வேலைகள் இமாலய சாதனை போல் கடினமாயின. உடல் முழுவதும் வலித்தது. மூச்சு வாங்கியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

    மாதம் 8 : நான் ரொம்ப பெரிதாக இருக்கிறேன். ரொம்ப நடக்க முடியவில்லை. நான் ஏதாவது நகர்ந்தால் உள்ளே குழந்தைக்கு கஷ்டமாகி விடுமோ என்ற கவலை அதிகம் இருந்தது.

    மாதம் 9 : என்னால் முறையாய் சாப்பிட முடியவில்லை. ஏனெனில் வயிற்றில் இடம் இல்லை. எல்லா இடமும் குழந்தைக்கே சரியாக இருந்தது. ரொம்ப சோர்வு, கொஞ்சம் நடந்தாலே மூச்சு வாங்கியது.


    எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் என் மகிழ்ச்சியில் இந்த பத்து மாத அவஸ்தையும் மறந்து போனது. இனி என் மகளே என் உலகம் என்று தோன்றியது.

    இது ஒரு நல்ல ஆரோக்யமான மனநிலை, உடல் நிலை உள்ள ஒரு தாயின் அனுபவம். ஆனால் எத்தனையோ தாய்மார்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இவற்றின் நடுவே தன் வயிற்றில் உள்ள பிள்ளையை காப்பாற்றுகின்றனர்.

    30 வருடங்களுக்கு முன்னால் பல குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தாயின் நிலையினை எண்ணிப் பாருங்கள். அனைத்து குழந்தைகளிடமும் ஒன்று போல அன்பு காட்டிய அந்தத் தாயினை நினைத்துப் பாருங்கள்.

    இன்று விஞ்ஞானம் முன்னேறி விட்டது. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை. இருப்பினும் இன்று அதிகம் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளனர். கடும் போட்டி நிலவும் நிர்வாகத்தில் தன் கர்ப்பத்தினை காரணம் காட்டி சில வசதிகள் பெறுவது கடினம். பல நிறுவனங்கள் சமீபத்தில் திருமணம் நடந்த பெண்களுக்கு வேலையே தருவதில்லை. இரவு, பகல் ஷிப்ட் வேலை, நின்று கொண்டே செய்யும் வேலை, மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் வேலை என காலத்தின் கட்டாயம் தரும் பாதிப்புகளை போராடி ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கிறேன். சிலருக்கு சில மருத்துவ பிரச்சனைகளும் இருக்கக் கூடும். வீடு, ஆபீஸ் என ரோபோட் போல் ஆகி விட்ட நிலையில் இந்த கால இளம் தாய்மார்களை கை கூப்பி வணங்கத்தான் வேண்டும்.


    பேறு காலத்திற்குப் பின் உடலில் ஏற்படும் அதிர்வுகளை உடல் பழைய நிலையினை அடைய 3 மாத காலம் பிடிக்கும், இரவு, பகல் என அழும் இளம் சிசு சற்று நிதான நிலையை அடைய  3 மாத காலம் பிடிக்கும். சில தாய்மார்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஒரு நாட்டை கூட ஆண்டு விடலாம். ஆனால் இந்த பிஞ்சு குழந்தையினை ஓராண்டு வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும். இதற்கு தாய் என்ற ஒரு சக்தியினை இறைவன் அளித்திராவிட்டால் நாட்டில் ஜனத் தொகை கால் கூட இருந்திராது. இத்துடன் நின்று விடுமா அம்மாவின் பங்கு. அவளது ஆயுள் உள்ள வரை அவள் அதே அம்மாதான். அவளது இருதயம் பெயருக்குத்தான் உடலின் உள்ளே இருக்கின்றது. மற்றபடி தன் பிள்ளையை நினைத்து நினைத்து இருதயம் வெளியே தான் இருக்கின்றது.

    இந்த கட்டுரையினை நான் எழுதும் பொழுது சில தாய் மார்களை குறிப்பிட்டு அவர்களின் சாதனைகளை எழுதவில்லை. காரணம். ஒவ்வொரு தாயும் தன்னை துண்டு துண்டாக பிய்த்து போட்டுத்தான் தன் சக்திக்கு பன்மடங்கு கூடுதலாக கொடுத்து தன் பிள்ளைக்காக வாழ்கின்றாள். இதில் ஒவ்வொரு அன்னையும் சாதனையாளரே!

    சுயநல மில்லாத, கலப்படமில்லாத ஒரு அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான்.

    இளமை நம்மை விட்டு போகும். வளமை நம்மை விட்டு போகாது, ஆனால் உங்களுக்கு 60 வயதாகி தாய் உயிருடன் இருந்தால் அத்தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்று இருந்தது போலவே இளமையாகவும் வளமையாகவும் இருக்கும்.

    அனைத்து தாய்மார்களையும் இவ்வுலகம் கை கூப்பி வணங்குகின்றது. #MothersDay

    டாக்டர் கமலி ஸ்ரீபால்.
    ×