search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று அன்னையர் தினம் - தாய்மைக்கு தலைவணங்குவோம்
    X

    இன்று அன்னையர் தினம் - தாய்மைக்கு தலைவணங்குவோம்

    • தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
    • துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள்.

    அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடம் தாய்மை. கருவில் குழந்தையை சுமக்க தொடங்கிய நொடி முதலே தன் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்வாள். அவளின் ஒவ்வொரு செயலுமே கருவில் வளரும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே அமையும்.

    தனக்கு பிடித்தமான, விருப்பமான உணவாக இருந்தாலும் சரி அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதினாலே அந்த உணவையே வெறுத்து ஒதுக்கிவிடுவாள். கருவில் வளரும் குழந்தை நலமாக இருப்பதற்காக தன்னுடைய ஆசைகளை மட்டுமல்ல, ஒவ்வொரு தேவைகளையும் புறந்தள்ளிவிடுவாள். குழந்தையின் நலனை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து அதன் தேவையை நிறைவேற்ற முழுமூச்சாக இயங்குவாள்.

    குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். சிறு வயிற்று வலிக்கே துடித்து போகும் ஆண்கள் அதனை உணர்ந்தாலே தாய்மையின் தியாகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.

    மழலை பருவம் முதலே தாய் தன்னை எப்படி வளர்த்து ஆளாக்கி இருப்பாள் என்பதை பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களுடைய பிள்ளைகளை மனைவி எப்படி வளர்த்து ஆளாக்குகிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் தியாக வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம். குடிசை வீட்டில் ஏழ்மையிலும், பணக்கார வீட்டில் சொகுசு வசதியுடனும் என வாழ்வியல் முறையில் வித்தியாசங்கள் இருக்கலாம்.

    ஆனால் ஏழைத்தாய் தன்னுடைய பிள்ளை மீது காட்டும் பாசமும், பணக்கார தாய் தன் குழந்தை மீது காண்பிக்கும் அன்பும் ஒரே அளவுகோலாகத்தான் இருக்கும். எந்தவொரு சூழலிலும் பிள்ளையின் பசியை போக்காமல் தான் உண்பதற்கு விரும்பமாட்டாள். பிள்ளைகள் சாப்பிடாமல் அடம் பிடித்தால் அதன் விருப்பம் என்னவோ அதனை நிறைவேற்றி வைப்பாள். விளையாட்டு காட்டியே சாப்பிடவும் வைத்துவிடுவாள். குழந்தை வயிறாற சாப்பிட்டதை உறுதி செய்த பிறகே நிம்மதி பெருமூச்சு விடுவாள். தன் பசியை போக்க முன் வருவாள்.

    மனதுக்கு கஷ்டமாக இருக்கும் சமயத்தில் ஆறுதல் தரும் வார்த்தைகளை எத்தனை பேர் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஆழ் மனதில் இருந்து வெளிப்படும் அன்பு கலந்த வார்த்தை தாயிடம் மட்டுமே உணர்வுப்பூர்வமாக வெளிப்படும். துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கை முறையை மாற்றிவிடலாம். ஆனால் தாய் வெளிப்படுத்தும் பாசம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாது. ஒரே மாதிரித்தான் வெளிப்படும்.

    எல்லா பிள்ளைகளையும் அரவணைத்து அன்பை பொழிவாள். மனித உயிருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக உயிர்கள் அனைத்துக்கும் தாய்மையே பிரதானம். தாய் இல்லாவிட்டால் உலக உயிர்கள் எதுவும் இல்லை. உலக ஜீவராசிகள் அனைத்திடமும் தாய்மை வெளிப்படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதே நிதர்சனம்.

    வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் தாய்மையின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது. என்னென்றும் தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் உங்களை பெற்றெடுத்த பொழுது மகிழ்ந்ததை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அவருக்கு அளிப்பதாக உங்களுடைய செயல்பாடு அமையட்டும். தாய்மைக்கு தலை வணங்குவோம்!

    Next Story
    ×