search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்கோயில் தெய்வம் நீதான் அம்மா!
    X

    திருக்கோயில் தெய்வம் நீதான் 'அம்மா!'

    • பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
    • தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.

    உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

    என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.

    பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.

    ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!

    உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!

    இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!

    "மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.

    வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.

    பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.

    இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"

    என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?

    நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,

    வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.

    எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    "பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!

    பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

    இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.

    வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.

    குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.

    அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    Next Story
    ×