search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Nurses Day"

    • மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான். எந்தவித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள் அவர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களை இந்த நாளில் வணங்குவோம்; நன்றி செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான்.
    • செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு, பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொரோனா பெருந்தொற்றின்போது செவிலியர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது.
    • ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ந்தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

    மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கொரோனா பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது. அத்தகைய செவிலியர்களின் தொண்டினைப் போற்றும் வகையில், நமது அரசு பொறுப்பேற்ற பின் அவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    1,412 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,912 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் 2,650 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5,100 நிலையான ஊதியம் பெறுகின்றனர்.

    வெளிப்படையான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மூலம் 9,535 செவிலியர்கள் அவரவர் விரும்பிய இடங்களுக்கே பணிமாறுதல்கள் பெற்றுள்ளனர். செவிலியர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு செவிலியர் படிப்புகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளில் 'போஸ்ட் பேசிக் டிப்ளமோ' செவிலியர் பயிற்சிப் பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனில் செவிலியர்களின் பெரும்பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேன்மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் சர்வதேச செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்!
    • காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்.

    சென்னை:

    சர்வதேச செவிலியர்கள் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் சர்வதேச செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது.
    • நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும்.

    சென்னை:

    உலக செவிலியர் தினத்தையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும்.

    நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த முறையில் மருத்துவம் கிடைத்திட, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

    புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ம.தி.மு.க. சார்பில் செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த சேவை புரிந்த நர்சுகளுக்கு மத்திய அரசின் சார்பில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டன. #InternationalNursesDay #nurses
    புதுடெல்லி:

    சிறப்பாக மருத்துவ சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் மதிப்புமிக்க ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 35 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.



    இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.  #InternationalNursesDay #nurses

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக சேவை புரிந்த 251 செவிலியர்களுக்கு விருதினை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். #InternationalNursesDay
    சென்னை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாக கூட்டரங்கில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

    இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின்ஜோ, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    விழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    மக்களின் நல்வாழ்விற்காக இரவு பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. நவீன செவிலிய பணிகளுக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் செய்யவும், 500 செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1, 1500 செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-2 என 2 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதலாக புதிய செவிலியர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #InternationalNursesDay

    ×