search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hosur"

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
    • பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.

    திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் தாமதமாக செல்லும்

    திருப்பூர் :

    கோவை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் 21 நாட்களுக்கு ஓசூர் செல்ல தாமதமாகும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

    தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக செல்லும் லோகமான்யதிலக்(மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் நாளை 29-ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29ந்தேதிகள், நவம்பர் மாதம், 1, 3, 5, 8, 10, 12 ஆகிய தேதிகளில் 21 நாட்கள் ஓசூர் அருகே ராயக்கோட்டை - கீழமங்கலம் இடையே ஏதேனும் ஒரு இடத்தில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். இதனால் வழக்கமாக தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் இந்த நாட்களில் தாமதமாக செல்லும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓசூர் அருகே அரசு பள்ளியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் மாணவர்களின் சான்றிதழ்கள், விடைத்தாள்கள், ஆவணங்கள் எரிந்து நாசம் ஆனது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தேகவுடு மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இரவு 7.30 மணி அளவில் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் நீண்ட நேரம் போராடி தலைமை ஆசிரியரின் அறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் (டி.சி.), தேர்வு விடைத்தாள்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு, கணினிகள், யு.பி.எஸ். மற்றும் ஏராளமான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. அறையின் 10 பீரோக்களின் இருந்த ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதேபோல ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்கள் எரிந்துவிட்டதோ? என்று ஒருவித பதற்றத்துடன் தேடினார்கள்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் தான் பள்ளியில் தீப்பிடித்தது தெரியவந்தது. தீ விபத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை கட்டிட சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், அறையில் உள்ள வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காலை 4 மணி அளவில் அந்த பகுதியில் மர்ம நபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

    பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக பெட்ரோல் குண்டு வீசினர்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்டமசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி மாநகராட்சியாக நாகர்கோவில் செயல்படும்போது நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்து முறைப்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இதேபோல் ஓசூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கும் சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சியின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. மாநகரட்சிகள் விவரம் வருமாறு:-

    1. சென்னை
    2. மதுரை
    3. கோவை
    4. சேலம்
    5. நெல்லை
    6. வேலூர்
    7. திருச்சி
    8. தூத்துக்குடி
    9. ஈரோடு
    10. தஞ்சாவூர்
    11. திருப்பூர்
    12. திண்டுக்கல்
    13. நாகர்கோவில்
    14. ஓசூர் #TNAssembly

    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இன்று ஓடவில்லை. #BharatBandh
    ஓசூர்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மார்த்தாண்டம், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று அதிகாலை 2 மணியுடன் ஓசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 270 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோல ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வந்தன. பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இன்று காலை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    ஓசூரில் இருந்து வழக்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி, சர்ஜியாபுரம், மாலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் ஓசூர் அருகே தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன.

    ஓசூரில் இருந்து சாய்பாபா ஆசிரமம் உள்ள புட்டபர்த்திக்கு இன்று காலை அரசு பஸ் இயக்கப்படவில்லை.

    பெங்களூருவில் வாடகை அதிகம் என்பதால் ஏராளமான தொழிலாளர்கள் ஓசூரில் தங்கி இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் பெங்களூரு சென்று வேலை பார்த்தனர். இன்று வேலைநிறுத்தம்  காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டனர்.

    தருமபுரி-பெங்களூரு, ஓசூர்-பெங்களூரு, சேலம்-பெங்களூரு பயணிகள் ரெயிலிலும், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று காலை ஓசூரில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருக்கு சென்றனர்.  #BharatBandh

    ஓசூர் அருகே பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வி‌ஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் சிச்ருகானபள்ளியில் பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் கழிவுநீரை சுத்திகரிக்க மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டேங்க் ஒன்றை அமைத்து பேட்டரி தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன கழிவுநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனை ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் அகற்றி சுத்தப்படுத்துவது வழக்கம்.

    நேற்று இரவு பாகலூர் அருகே உள்ள கொத்தபள்ளியை சேர்ந்த நாகேஷ் (வயது 25) என்பவர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று பராமரிப்பு பணியை செய்தார்.

    அப்போது அங்கு இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தார். உடனே அதில் இருந்து வி‌ஷவாயு கசிந்ததால் நாகேஷ் மயங்கி அங்கேயே கீழே விழுந்தார். இதனை கண்ட பாகலூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் நாகேஷின் உடல் அருகே ஓடிவந்தார். அப்போது மஞ்சுநாத்தும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் 2 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஓசூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பான முறையில் மூடிவிட்டு நாகேஷ், மஞ்சுநாத் உடலை மீட்டனர்.

    நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் வி‌ஷவாயு தாங்கி இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தெரியவந்ததும் உடனே கம்பெனியில் திரண்டனர். அப்போது போலீசார் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    உடனே உறவினர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க மறுத்து போலீசாரை முற்றுகையிட்டனர். இறந்தவர்களின் 2 பேரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடல்களை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. உடனே அங்கு விரைந்து வந்த ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி, தாசில்தார் முத்துபாண்டி உள்பட அதிகாரிகள் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வேலை நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.
    ஓசூர்:

    உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

    தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியில், தெருவோரம் நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர் தேர்பேட்டை பகுதிக்கு சென்று நடுகல்லை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தெப்பக்குளம் அருகே சாலையோரம், 3 ஆடி ஆழத்தில் 10 அடி உயரம் கொண்ட ஒரு நடுகல் புதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நடுகல் தோண்டி எடுக்கப்பட்டது.

    இந்த நடுகல்லில் அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் கையில் கத்தி, கழுத்தின் அருகே இருப்பது போன்றும், சிவலோகத்திற்கு பெண்ணை அழைத்து செல்வது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிவலிங்கம், நந்தி மற்றும் சில பெண்கள் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த நடுகல் 5-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று மையத்தினர் தெரிவித்தனர். 
    ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.

    இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.

    இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×