search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா செல்லும் அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்
    X

    கர்நாடகா செல்லும் அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்

    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இன்று ஓடவில்லை. #BharatBandh
    ஓசூர்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மார்த்தாண்டம், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று அதிகாலை 2 மணியுடன் ஓசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 270 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோல ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வந்தன. பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இன்று காலை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    ஓசூரில் இருந்து வழக்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி, சர்ஜியாபுரம், மாலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் ஓசூர் அருகே தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன.

    ஓசூரில் இருந்து சாய்பாபா ஆசிரமம் உள்ள புட்டபர்த்திக்கு இன்று காலை அரசு பஸ் இயக்கப்படவில்லை.

    பெங்களூருவில் வாடகை அதிகம் என்பதால் ஏராளமான தொழிலாளர்கள் ஓசூரில் தங்கி இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் பெங்களூரு சென்று வேலை பார்த்தனர். இன்று வேலைநிறுத்தம்  காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டனர்.

    தருமபுரி-பெங்களூரு, ஓசூர்-பெங்களூரு, சேலம்-பெங்களூரு பயணிகள் ரெயிலிலும், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று காலை ஓசூரில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருக்கு சென்றனர்.  #BharatBandh

    Next Story
    ×