search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery problem"

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
    • மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசும், கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று திருப்பதியில் குமாரசாமி கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தில் பங்கேற்று குமாரசாமி சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    கர்நாடக மக்களும் தமிழர்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.

    இதனால் பிரச்சனை தொடர்ந்து வருகிறது இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சனை தொடங்குகிறது. இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சனையில் சுமூகமான தீர்வை காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    காவிரி பிரச்சனையில் சாதித்தது தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சனையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 9 தலைவர்கள் கலந்து கொண்டனர்.#CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆகிய 9 கட்சித் தலைவர்களும் தி.மு.க. சேர்ந்த துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், வி.பி. துரைசாமி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெறுவதற்கு அரசு தேவையான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.#CauveryIssue #MKStalin
    காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என்று திருச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறினார்.#KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    செம்பட்டு:

    கர்நாடக முதல்-மந்திரியாக வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) பதவி ஏற்க இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குமாரசாமி நேற்று மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் தரப்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் குமாரசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    அதன்பிறகு அவர் பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிகம்பத்தை தொட்டு வணங்கி விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

    சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி நிருபர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடும், கர்நாடகமும் சகோதரர்கள் மாதிரி ஆகும். தண்ணீர் பிரச்சினையால் தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டவன் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி நதிநீர் பங்கீடு சுமுகமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளது. அதனால் 5 ஆண்டுகள் சுமுகமாக ஆட்சியை முடிப்பேன். தண்ணீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.



    அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர், இரவு 9.40 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, குமாரசாமி திருச்சி வந்ததும் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு தான் காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். காவிரி விவகாரத்தில் சில பிரச்சினைகளை இரு தரப்பிலும் சந்திக்கிறோம். கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவை சரி செய்யப்பட வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எனது அரசு மட்டுமல்ல. யாராக இருந்தாலும் மதித்துத்தான் ஆக வேண்டும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆறுகள் வறண்டுபோய் கிடந்தன. இதனால் தான் இரு மாநிலங்களிலும் பிரச்சினை உருவானது. ஆனால் இந்த ஆண்டு ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து எங்கள் மாநிலத்தில் ஆறுகள் நிரம்பும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிரமமும் இருக்காது. எனது அரசு 5 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த நிர்வாகத்தையும் தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக கூறி, குமாரசாமியிடம் நேற்று பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. அப்படி இருக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை. நான் ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். இங்குள்ள அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

    எங்கள் மாநில விவசாயிகள் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் வருகிற 19-ந்தேதி சென்னையில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இதில் அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.



    அதன் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் அந்த கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
    ×