search icon
என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.

    இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சஜ்ஜத் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொன்றார்.

    மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் தனது 7 குழந்தைகளையும் அதே கோடரியால் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனையடுத்து சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தைகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் ஆழ்ந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    • நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர்.
    • 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ் பயணிகள் 9 பேரை கடத்திச் சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர். அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.

    அதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள், பணியாளர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சீனர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதலில் சீன என்ஜினீயர்கள் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என பஞ்சாப் மாகாண முதல்மந்திரியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மரியம் நவாஸ் கூறுகையில், பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கும்போது அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் எந்த ஒழுக்கத்தின் கீழும் வர விரும்பவில்லை. பயங்கரவாதம் கடினமான போரின் வடிவத்தை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய தளங்களில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கவேண்டும். பயங்கரவாதிகளிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் கிடைத்த அமெரிக்க ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
    • திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த 20 பயங்கரவாதிகள் படுகொலைகளுக்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தான் காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியானது.

    காலிஸ்தான் இயக்கத்தில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை குறி வைத்து வெளிநாட்டு மண்ணில் இந்த படுகொலைகளை இந்திய உளவுத்துறையின் சிலீப்பர் செல்கள் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது. இது திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம் என தெரிவித்துள்ளது.

    • மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
    • புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

    அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

    தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் கூறும்போது, அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோலில் இருந்தது. நாக்கில் விஷத்தின் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

    புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதையடுத்து புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே புஷ்ரா பீபி கூறும்போது, கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை எனக்கு உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன், உணவு , தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன. தற்போது கழிப்பறையை சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
    • அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.

    ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது
    • டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.

    விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.

    மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் என சொல்லப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    • பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தானில் உள்ள கப்லு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகம்மது ஷிராஸ். இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். அவரது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமை 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர்.

    இந்நிலையில் அந்த சிறுவன் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார். முகம்மது ஷிராஸ் தனது சகோதரி முஸ்கானுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிறுவன் முகம்மது ஷிராசை தனது நாற்காலியில் அமர வைத்த காட்சிகளும் உள்ளது. மேலும் சிறுவனுடன் பிரதமர் சிரித்து பேசி உரையாடிய காட்சிகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறுவன் ஷிராசிடம் எனது பெயர் என்ன? என்று விளையாட்டுத்தனமாக கேட்கிறார். அதற்கு ஷிராஸ், அப்பாவித்தனமாக 'ஷெபாஸ் ஷெரீப் மாமா' என்று கூறுகிறார்.

    இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன.
    • பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.

    பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் கூறும்போது, விமானப்படை தளத்துக்குள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியானதாக தெரிவித்துள்ளது.

    இந்த விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது. சீன முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வரும் அந்த இயக்கம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குவாதர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×