என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
    • அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

    50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட்டு அவை நேரலை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை 13 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த இடதுக்கீடு 66 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட முன் வரைவு வரும் மார்ச் மாதம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

    புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான பி அண்டு சி பள்ளியை திறக்க தமிழக அரசு மறுத்துவிட்டதால் ரூ.2,151 கோடி தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

    காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட கூட்டம் நடத்தவேண்டும். கோதாவரி ஆற்றிலிருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி.தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 39 ஆயிரத்து 393 களப்பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டாம் நிலை காவலர்கள் 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர்களாகவும் 10 ஆண்டுகளில் தலைமை காவலராகவும், 20ஆண்டுகளில் சிறப்பு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுத்த நிதிநிலை அறிக்கையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    15-ந்தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
    • தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பேசியுள்ளார்.

    இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.



    இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
    • இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    அதே சமயம் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தகவல் தெரியவவில்லை. இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் 2021 பிப்ரவரியில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்தன. இதன் பின்னர் போர்நிறுத்த மீறல் நடைபெறுவது வெகுவாக குறைந்தது

    சில நாட்களுக்கு முன்பு ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒரு கேப்டன் உட்பட இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும்.

    புதுடெல்லி:

    கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தினர்.

    வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து கூறும்போது 'வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது . இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்சனையை மக்களவையில் இன்று எழுப்புவேன்' என்றார்.

    • இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
    • ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி, நீதிக் கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராவிட்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.

    அதனைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.

    அப்போது அவர் சந்தித்த விமர்சனம், அவமானங்களை எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்றார்.

    அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.

    அ.தி.மு.க. என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். அ.தி.மு.க. என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

    இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அ.தி.மு.க.வுக்கு எந்த சேதாரமும் இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.

    ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் தற்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் கூறும் வகையில் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

    • என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
    • ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.

    ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள்.

    உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கவுரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் வலுவடைவீர்கள் என நம்புகிறேன்.

    கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.

    ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள்.

    என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.

    என விராட் கோலி கூறியுள்ளார்.

    • உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
    • பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

    இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இவற்றை அமைக்க மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ. 15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.

    ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வயதிலிருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டு என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.

    டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில் ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

    ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Kelton நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.

    தமிழகம் முழுவதும் கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்?

    கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1.050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.



    • கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
    • போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.

    இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
    • உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது, பேராசியர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்ற பணிகளில் உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது.

    மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.

    இந்தநிலையில், உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பன்னீர் செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். இக்கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி இரட்டை இலை, சின்னம் விவகாரத்தில் அடுத்த நகர்வு குறித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றி கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×