என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், திருவான்மியூரில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தவெக கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான், அதனால் தான் குழந்தைகள் விங் என உருவாக்கி உள்ளனர். புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் ஒருவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார். ஜி.எஸ்.டி. கவுன்சில் வேறு பட்ஜெட் வேறு" என்று தெரிவித்தார். 

    • குடும்பஸ்தன் திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அப்படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பினார்.
    • பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.

    பாரிஸ்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

    இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.

    இந்நிலையில், பிரான்சில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    வாஷிங்டனில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
    • உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது என்றார் அண்ணாமலை.

    சென்னை:

    திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.

    உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி.

    கவர்னரும், அண்ணாமலையும் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம்.

    உங்கள் கட்சியில்தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

    பா.ஜ.க. தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்தியா 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.

    ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.

    • சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
    • குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். விராட் கோலி அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    • ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
    • ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.

    வாஷிங்டன்:

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.

    இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.

    உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.

    அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    • குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜ் பால் மிட்டாய் போலவே இருக்கும்.
    • பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டுள்ளார்.

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் வு என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர் பால் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார்.

    ஷுவாங் பாவோ என அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங் பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும்.

    ஒருநாள் அவரது உறவினர் பட்டாசைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். அதை வூ மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டுள்ளார்.

    ஸ்மாஷ் பட்டாசு என பொருள்படும் ஷுவாங் பாவோ நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும். இது சீன நாட்டில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின்போது பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பால் சாக்லேட் என நினைத்து வூ வெடியை பல்லைப் பயன்படுத்தி கடித்தபோது வெடித்தது. இதனால் அந்தப் பெண்ணின் வாயில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் வீட்டின் ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாக்கெட் ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு சிறுவயதில் நான் ரசித்த டாரோ பால் மிட்டாய்போல இருந்தது. எனவே அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தபோது அது திடீரென வெடித்தது என தெரிவித்தார்.

    • விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை ஆர்சிபி தக்க வைத்தது.
    • புதிய கேப்டன் யார் என்பதை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று அறிவிக்கிறது.

    பெங்களூரு:

    10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.

    ஆர்சிபி அணியை கடந்த சில சீசன்களாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார். நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டூ பிளெசிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    இந்நிலையில், மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நிலவுகிறது.

    ரஜத் படிதார் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணி கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என வெளிப்படையாகவும் படிதார் பேசியிருக்கிறார்.

    ஆனால் பெங்களூரு அணியின் தேர்வாக விராட் கோலி இருக்கக் கூடும். அவர் இதற்கு சம்மதிக்க வேண்டும்.

    இன்று காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது

    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் நலமுடன் இருக்கிறார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
    • விண்வெளி வீரர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

    வாஷிங்டன்:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

    அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என குறிப்பிட்டது.

    இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது. மார்ச் 12-ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

    இதன்மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.

    கராச்சி:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

    இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.

    ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.

    ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.

    • பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்துள்ளார்.

    பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார்.

    பவதாரிணி மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய பிறந்தநாள் மற்றும் திதி இன்று ஒரே நாளில் வந்துள்ளது.

    அதனால், பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பலர் உருக்கமாக பவதாரிணியின் நினைவுகளை பிகிர்ந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்துள்ளார்.

    அதாவது, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவைத் தொடங்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

    பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், " பவதாவின் பிறந்தநாளும், திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. இது வேறு எங்கும் நடந்தது இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×