என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- வரவிருக்கும் தேர்தலில் தோல்வியை தடுக்க மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்புகிறது.
- தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்புகிறது.
தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆக உயரும்.
- முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாக உயரும்
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும்.
அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது.
- மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று நண்பகலில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது.
இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய விமானப்படையின் விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து மியான்மருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் கூடாரங்கள், போர்வைகள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவும் செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
- உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
- எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள். நிச்சயமாக தி.மு.க.வுக்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் என்று கூறினார்.
- சூரியதேவ் என்ற இளைஞர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
- இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
- சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.
அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
- 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
- ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\
- கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்.
- கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 8-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.






