என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
- தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.
சின்னாளபட்டி:
100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.
நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் நெற்று வெளியானது.
இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாவனா தனியாக ஒரு அறையில் இருக்கிறார். அமானுஷ்யமான ஒரு உணர்வு மற்றும் உருவம் தெரிகிறது.
- கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த புதன்கிழமை அன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பானது சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூற மறுத்துவிட்டார்.
- சி வோட்டர் நடத்திய கணக்கெடுப்பில் 27% பேர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளார்.
- த.வெ.க. தலைவர் விஜயை 18% பேர் தேர்வு செய்துள்ளனர்.
தேர்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் சி.வோட்டர் நிறுவனம் தற்போதைய தமிழக அரசி யல் நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியானது. அதில் தமிழக அரசியல் தலைவர்கள் செல்வாக்கு தொடர்பாக பல்வேறு ருசிகர தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இப்போது தேர்தல் நடந்தால் முதல்-மந்திரி பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நெருங்கி வரும் வகையில் விஜய்யை முதல்வராக்க 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீத ஆதரவும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் மிக மிக திருப்தியாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் திருப்தி என்று கருத்து கூறியுள்ளனர்.
25 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். 24 சதவீதம் பேர் பதில் சொல்ல இயலாது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளது என்ற கேள்விக்கு 22 சதவீதம் பேர் அவர் மிக மிக அற்புதமாக செயல்படுவதாக மிகுந்த திருப்தி தெரிவித்து உள்ளனர். 33 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு ஒட்டு மொத்தத்தில் திருப்தி தருவதாக ஆதரவு தெரி வித்துள்ளனர்.
22 சதவீதம் பேர் மட்டுமே முதல்-அமைச்சர் செயல் பாடில் திருப்தி இல்லை என்று கூறி இருக்கிறார்கள். 23 சதவீதம் பேர் பதில் சொல்ல தெரிய வில்லை என்று கூறியுள்ள னர்.
ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்கு அமைந்து இருப்பதாகவும் தமிழக மக்களின் கருத்துக்க ளில் இருந்து தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் முதல் கோரிக்கையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகம் ஆகிவிட்டதாக 12 சதவீதம் பேர் கூறியுள்ளனர். போதைப் பொருட்கள் பிரச்சினை அதிகமாக இருப்பதாக 10 சதவீதம் பேரும், வேலையில்லா பிரச்சினை இருப்பதாக 8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே மிகுந்த திருப்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு மூலம் மக்கள் மத்தியில் தி.மு.க. தொடர்ந்து செல்வாக்கில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு அதிக பேரால் ஆதரவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அது போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வளர்ச்சியும் இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
- கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டு வசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
* ஆதி திராவிட பழங்குடியின வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது.
* ஆதி திராவிட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
* தி.மு.க. அரசு சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்படுகிறது.
* சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
* வன்கொடுமை அடிப்படையில் பதியப்படும் வழங்குகள் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளது.
* வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17,098 நபர்களுக்கு தீர்வு உதவித்தொகையாக ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெற அப்பகுதியிலேயே 328 உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்படுகிறது.
* கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
* பழங்குடியினர் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.
- தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மிக முன்னேறிய மாநிலம் ஆகும். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி முழுமையாக பின்தங்கி உள்ளது. அதற்கு தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டு இருக்கும் குழப்பங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு ஓடிக் கொண்டு இருக்கின்றன. அந்த மாநிலத்தில் பலருக்கும் அதிக மாத சம்பளம் கிடைக்கிறது. என்றாலும் அவர்கள் கூட வேறு மாநிலத்துக்கு செல்வதையே விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. மொழி கொள்கையை முன்வைத்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் நடத்துமாறு நாங்கள் கூறினோம். அதற்கு இதுவரை அவர்கள் பதில் சொல்வதில்லை.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள பாடப்புத்தகங்களை இன்னும் அவர்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யவில்லை. தி.மு.க. ஊழலில்தான் மிதக்கிறது. அதனால்தான் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதை உணர முடிகிறது. சமீப காலமாக அங்கு சென்று வரும்போது இதை உணர்ந்து இருக்கிறேன்.
எனவே 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். தி.மு.க.வை மக்கள் நிச்சயம் பதவியில் இருந்து அகற்றுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறது.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும். தற்போது பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. சொல்லும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு பற்றி இதுவரை எதுவும் சொல்லவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி இருக்கும் போது தி.மு.க. ஏன் இதை பிரச்சனையாக இப்போது எழுப்ப வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். 5 ஆண்டுகளாக ஊழலில் திளைத்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டு இப்படி செயல்பட ஆரம்பித்து உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மேற்கொள்ளப்படும் போது அந்த சமயத்தில் யாருக்கும் நிச்சயம் அநீதி ஏற்படாது. இதை என்னால் .0001 சதவீதம் உறுதியாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியும்.
இந்தி திணிப்பு என்றும் தி.மு.க. ஆட்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். தமிழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை தமிழில் நடத்தாமல் இருப்பதுதான் உண்மையில் தமிழுக்கு எதிரானது.
மத்திய அரசின் கல்வி கொள்கை தாய்மொழியை வளர்ப்பதாகவே அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
- கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
- தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
- மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?
உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?
தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின்!
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!
#நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை என கூறியுள்ளார்.
- நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான்.
- எம்புரான்' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் விஷ்வல் மற்றும் மேக்கிங் பற்றி மக்கள் பலரும் பாராட்டி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான 22 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்பொழுது உலகளவில் திரைப்படம் 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரை திரட்டி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் மற்றும் பெண்கள் கோஷமிட்டனர். மத்திய அரசு நிலுவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
- படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பியது.
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.
இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் பிணமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மியான்மரில் நிலநிடுக்கத்துக்கு 140-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளை அகற்ற, அகற்ற உடல்கள் வந்து கொண்டே இருந்தன.

இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-த்தை தாண்டியது. இதுதொடர்பாக இன்று காலை மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
அடுக்குமாடி கட்டிடங்களில் தங்கியிருந்த பலரது நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் மீட்புப் பணிக்கு மத்தியில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.56 மணிக்கு மியான்மரை நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே பீதியில் இருந்த மக்கள், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பலர் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இரவு பொழுதை கழித்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச உதவியை ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் கோரியுள்ளார். எந்த வெளிநாட்டு உதவிகளையும் பெற மியான்மர் தயாராக இருப்பதாகவும், நேபிடாவ், மண்டலே மற்றும் சகாயிங் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார்.
மியான்மரில் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு அவசர கால சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேரழிவை கையாளக்கூடிய போதுமான முன்னேற்பாடுகள் அவர்களிடம் இல்லை. மீட்புப்பணிகளில் ராணுவம், செஞ்சிலுவை சங்கங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 68 பேர் காயம் அடைந்தனர். 101 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் இன்று இயல்புநிலை திரும்பியது.
பாங்காக்கில் பெரும்பாலான மெட்ரோ மற்றும் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதில் சீனாவில் 2 பேர் காயம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து இன்று ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பியது.
ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சி130ஜே விமானம் மியான்மருக்கு புறப்பட்டது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் உள்ளன.
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு அனுப்பப் பட்ட முதல்கட்ட மனிதாபிமான உதவி மியான்மரில் உள்ள யாங்கோன் விமான நிலையத்தை அடைந்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அதேபோல் மியான்மருக்கு உதவிகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மியான்மருக்கு நிவாரணம் திரட்டி வருவதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
- சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.
இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.






