என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தனியாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், சிறுமிகளை கடிப்பதோடு வயதானவர்களையும் விரட்டி விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூர் வி.ஜி.வி., குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை எல்லை மீறி போயுள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வி.ஜி.வி., குடியிருப்பு 10-வது வீதியில் வீட்டின் முன் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென விரட்டி சென்று பாய்ந்து கடித்தது. இதில் அந்த சிறுமிக்கு 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அதே நாய் நேற்று ஒரே நாளில் அந்தப் பகுதியில் மேலும் பலரையும் கடித்து குதறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தெருநாய்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களும் போதிய பாதுகாப்பு இன்றி அவற்றை பொது இடங்களுக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சிறுமியை தெருநாய் விரட்டி சென்று கடிக்கும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்து இருந்தார்.
- கட்சியின் பெயரை சசிகலா அறிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கட்சியை தொடங்கிய சசிகலா பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் கட்சியின் பெயரை சசிகலா இன்று அறிவித்தார்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என கட்சி பெயரை சசிசலா அறிவித்தார். தொண்டர் ஆரம்பித்த கட்சியில் சசிகலா தன்னை இணைத்துக் கொண்டார்.
- பெருஞ்சானி அணை நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கன்னப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மே மாதத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். அதற்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து காணப்படுகிறது.
அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.32 அடியாக உள்ளது. அணைக்கு 342 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 402 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சானி அணை நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 4.66 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 4.75 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.98 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் கிடுகிடு என சரிந்தது.
அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.20 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் லேசான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
- சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.
- விமானத்தில் சென்னைக்கு 250 பேர் பயணம் செய்ய இருந்தனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும், அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் காலை 7.35 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.
இதைப்போல் இந்த விமானம் நேற்று லண்டன் விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
இதனால் லண்டனில் இருந்து, சென்னைக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் சென்னைக்கு 250 பேர் பயணம் செய்ய இருந்தனர்.
லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் ரத்தால் சென்னையில் இருந்து இன்று காலை 7.35 மணிக்கு, லண்டன் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விமானம் நாளை அதிகாலை, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய 218 பயணிகள், மற்றும் லண்டனில் இருந்து வர வேண்டிய 250 பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- பெட்ரோலியப் பொருளான இதை ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
- போருக்கு முன் கிலோ ரூ.112-க்கு விற்கப்பட்ட பாலியஸ்டர் பைபர், தற்போது 40 சதவீதம் வரை விலை உயர்ந்துவிட்டது
கரூர்:
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் உலக அளவில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் போரின் எதிரொலியாக, இந்தியாவின் ஜவுளித் துறைக்குத் தேவையான பாலியஸ்டர் பைபர் (பாலிஎத்திலீன்) எனும் முக்கிய மூலப்பொருள் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, கப்பல் போக்குவரத்தும் நின்று போனதால் கரூரில் உற்பத்தியான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இது ஏற்றுமதியாளர்களையும், பல லட்சம் தொழிலாளர்களையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகியும், ஹோம்லைன் டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளருமான ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் உற்பத்தியாகும் மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழிலில், பருத்தி நூலுடன் கலக்கப்படும் பாலியஸ்டர் பைபர் பால்ஸ் மிக முக்கியமானது. பெட்ரோலியப் பொருளான இதை ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது போர் காரணமாக வளைகுடா நாடுகள் ஆலைகளை மூடி விட்டதாலும், இந்தப் பொருட்களை ஏற்றி வந்த 3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஆங்காங்கே நடுக்கடலில் நிறுத்தப்பட்டு உள்ளதாலும் மூலப்பொருள் வரத்து நின்றுபோய் விலை உயர்ந்துள்ளது.
போருக்கு முன் கிலோ ரூ.112-க்கு விற்கப்பட்ட பாலியஸ்டர் பைபர், தற்போது 40 சதவீதம் வரை விலை உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்த விலையின்படி பொருட்களை அனுப்பினால் ஏற்றுமதியாளர்களுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
மேலும், ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்களும் கரை சேர முடியாமல் தவிக்கின்றன. எனவே, பிரதமர் மோடி உலக நாடுகளுடன் பேசி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி மூலப்பொருட்களின் விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.
- மாணவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தனர்.
- மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவி கடந்த 10-ந் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது காட்டுப்பகுதியில் கழுத்து மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தனர்.
மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று காலை குறுக்குச்சாலையில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் சுமார் 10 மணிநேரம் நீடித்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் எட்டயபுரம், கோவில்பட்டி வழியாகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் இளம் பகவத்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது "குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்தது.
இதில் மாணவியின் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் பலாத்காரம் குறித்து சோதனைக்கு நெல்லை தடய அறிவியல் மையத்திற்கு மாணவியின் உடற்கூறுகளை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்னர். மேலும் சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி முறையீடப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை.
- எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பின் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் காளியம்மாள். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அ.தி.மு.க. வில் இணைந்துக்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் கூறுகையில்,
ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு.
அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு அ.தி.மு.க.வில் ஏற்கனவே செயல்பட்டுள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.
- தி.மு.க.விற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரசாரம் செய்வேன்.
- ஹிட்லர் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. மயானங்களில் உடல்களை எரிக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக மயானங்களில், சோலார் பேனல் அமைக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மன நிறைவுடன் பாராளுமன்றத்தில் பணியாற்றி, 1300 முறை பேசியிருக்கின்றேன். தி.மு.க. சமூகநீதிக்கான இயக்கம். கூட்டணி கட்சிகளுடன், சமூக நீதி கடைபிடிக்கப்படும்.
துத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மிருகங்கள் காட்டில் இல்லாமல் வீட்டில் உள்ளது. ஈவு இரக்கமற்ற மிருகங்கள். இதுவரை இல்லாத சட்டத்தை கொண்டு வந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். எல்லா ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் முயற்சித்து வருகிறார்.
தி.மு.க.விற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரசாரம் செய்வேன். தி.மு.க. கூறினால் அந்த அந்த தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன்.
விஜய் இப்போது தான் அரசியலில் நுழைந்து பிரவேசம் செய்கிறார். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
கடந்த சில தினங்களாக உலகம் மற்றும் இந்திய நாட்டு மக்கள் அவதிகுள்ளாகுவதற்கு மூலக்காரணம் டிரம்ப் தான்.
ஹிட்லர் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார். அவர் அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர். உளறுவதில், கோமாளியை விட லிமிட் இல்லாமல் மோசமாக பேசுகிறார் டிரம்ப்.
மோடியும், அமித்ஷாவும், தங்களது தகுதிகளை இழந்து, தகுதியில்லாமல் தி.மு.க.வை அழிப்பேன் என்று பேசுகிறார்கள். எதிர்கட்சிகளை மிரட்டி அடியபணிய வைக்கும், பா.ஜ.க. விற்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கிதம் உள்ளது.
தமிழ்நாட்டை ஏற்கனவே இருந்த கவர்னர் சீரழித்தார். இப்போது வந்தவரும் சளைத்தவர் அல்ல, அவரை போல செயல்படுவார் என சந்தேகம் எழுகிறது.
மோடி எவ்வளவு குட்டி கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது. திருச்சியில் அவரை வரவேற்கவே ஆள் இல்லை. ஏன் கைத்தட்டவே ஆள் இல்லை. மோடி தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்றார்.
- 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.
- புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திடவும் ஏதுவாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளதாகவும், இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறேன்.
ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளதாகவும், அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு என ரூபாய் 5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 3,112 கோடி நிலுவையில் உள்ளதாகவும், 2024–25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான 3,112 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும்.
மேலும் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதலமைச்சர், இந்தத் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்புப் பணிகளை தொடங்கியதாகவும், ஆனால் ஒன்றிய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, ஒன்றிய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் ஒன்றிய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும்.
ஒன்றிய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள அவர், அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும்.
அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும், இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, ஒன்றிய அரசு தனது ஆதரவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர், இவ்விஷயத்தில் இந்தியப் பிரதமர் அவர்களின் ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்ப்பதாக தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்தார் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.
- நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பதவி வகித்தவர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்தார் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பதவி வகித்தார். அதனை தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி ஓராண்டிற்கும் மேல் எந்த கட்சியில் இணையாமல் இருந்தார் காளியம்மாள்.
முன்னதாக, காளியம்மாள் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கான பணியிடத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
- மொத்தமுள்ள 1100 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 76 பின்னடைவுப் பணியிடங்கள், 39 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத்திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு இணையான மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களுக்கான பணியிடத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் மருத்துவர்களால் நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது; தொலைதூர கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் பணியாற்ற முடியாது என்பதால் அவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும். அத்தகைய மருத்துவமனைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 1100 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 76 பின்னடைவுப் பணியிடங்கள், 39 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு விருப்பமான, வசதியாக பணியிடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும். ஆனால், முதல் நாளில் பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விருப்பமான இடங்களை தேர்வு செய்து விட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு விருப்பமான இடங்கள் கிடைக்காது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் அனுப்பிய 21.02.2025ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி பணியிடத்தேர்வு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணியிடங்களைத் தான் முதலில் நிரப்ப வேண்டும். ஆனால், இவை எதையும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் பின்பற்றாதது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் துரோகமும், சமூக அநீதியும் ஆகும்.
இந்த அநீதியைகளையும் நோக்குடன் பணியிடத் தேர்வுக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். கலந்தாய்வில் விருப்பமான பணியிடங்கள் கிடைக்காத மாற்றுத்திறனாளிகளை அவர்கள் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்தி பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 120-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
நேற்று கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 970-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
12-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760
11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
12-03-2026- ஒரு கிராம் ரூ.290
11-03-2026- ஒரு கிராம் ரூ.300
10-03-2026- ஒரு கிராம் ரூ.300
09-03-2026- ஒரு கிராம் ரூ.290
08-03-2026- ஒரு கிராம் ரூ.290






