CBI | விளாத்திகுளம் 12ம் வகுப்பு மாணவி கொலை: சிபிஐ-க்கு மாற்றக் கோரி முறையீடு

மாணவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்தது.
CBI | விளாத்திகுளம் 12ம் வகுப்பு மாணவி கொலை: சிபிஐ-க்கு மாற்றக் கோரி முறையீடு
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் பிளஸ்-2 படித்து வந்தார்.

தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவி கடந்த 10-ந் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது காட்டுப்பகுதியில் கழுத்து மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தனர்.

மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று காலை குறுக்குச்சாலையில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் சுமார் 10 மணிநேரம் நீடித்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் எட்டயபுரம், கோவில்பட்டி வழியாகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் இளம் பகவத்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது "குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்தது.

இதில் மாணவியின் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் பலாத்காரம் குறித்து சோதனைக்கு நெல்லை தடய அறிவியல் மையத்திற்கு மாணவியின் உடற்கூறுகளை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்னர். மேலும் சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி முறையீடப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com