என் மலர்
இந்தியா
- ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
- முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.
ஐதராபாத் எம்.பி. அசாது தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்தது.
ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது.
ஓவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிர்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர்க்காததால் அதிருப்தி அடைந்த ஓவைசி, பீகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஓவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
பீகாரில் இதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால் அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
- சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
- கைக்குட்டையில் மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.
- சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.
ராஜஸ்தான் மாநிலம் போர்கேடா அடுத்த அகூர்தாம் காலனியை சேர்ந்தவர் மகேஷ் ரானேவால். இவரது மனைவி மம்தா. இவர்களது மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.
மகனின் திருமண அழைப்பிதழை புதுமையான முறையில் அச்சிட தம்பதியினர் முடிவு செய்தனர். அதன்படி சமூக ஊடகங்களில் திருமண அழைப்பிதழ் தேடிப் பார்த்தனர்.
அதில் கைக்குட்டையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இதேபோல் கைக்குட்டையில் தனது மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.
உள்ளூர் அச்சக உரிமையாளர் ஒருவர் உதவியுடன் திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தனர்.
கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டவர்கள் மகேஷ், மம்தா தம்பதியை வெகுவாக பாராட்டினர்.
காகித அட்டைகளில் சாமி படத்துடன் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் சாலையோரங்களில் வீசி விட்டு செல்கின்றனர்.
சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.
நாங்கள் கொடுக்கும் அழைப்பிதழை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கைக்குட்டையில் அழைப்பிதழ் அடித்து கொடுத்து வருகிறோம் என்றனர்.
- காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக மகளிர் தொழில்வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், 75 லட்சம் பெண்களின் வாங்கிக்கணக்குக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 26ல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதை விமர்சித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் பேசுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பெண்களுக்கு, 10,000 ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. ராகுல் கூறிய வாக்கு திருட்டு இது தான். பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
இதனால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்கலாம். ஆனால், காங்கிரசின் சித்தாந்தம் நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒன்று" என்று தெரிவித்தார்.
- வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
- தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.
மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
- தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
- இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.
- ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைவிட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 30க்கும் அதிகமான தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது.
காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும் என தெரிவித்துள்ளார் .
- மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் மெஹ்தி வெற்றி பெற்றார்.
- பஞ்சாபில் உள்ள தர்ன் தரனில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்மீத் சிங் சந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் பீகார் தேர்தலுடன் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி ராஜஸ்தானில் உள்ள அன்டா தொகுதியிலும், தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்காம் தொகுதியில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் மெஹ்தி வெற்றி பெற்றார். மேலும் பாஜக வேட்பாளர் தேவயானி ராணா நக்ரோட்டாவில் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் உள்ள காட்சிலா தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சோமேஷ் சந்திரசோரன் வெற்றி பெற்றார்.
மிசோராமில் உள்ள தம்ஷாவிலிருந்து மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் ஆர். லால்தாங்லியானா வெற்றி பெற்றார்.
ஒடிசாவில் உள்ள நௌபாடாவிலிருந்து பாஜக வேட்பாளர் ஜெய் தோலகியா, பஞ்சாபில் உள்ள தர்ன் தரனில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்மீத் சிங் சந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- 29 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டது.
- சீமாஞ்சல் பிராந்தியத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
அதேவேளையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. சீமாஞ்சல் பிராந்தியத்தல் மட்டும் 24 இடங்களில் போட்டியிட்டது.
இதில் அக்தருல் இமான் அமோர் தொகுதியில் 38,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 1,00,836 வாக்குகள் பெற்றார்.
கொச்சதாமன், பைசி, ஜாகிகாத், பஹாதுர்கஞ்ச் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சியிடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டது.
சீமாஞ்சலில் வளர்ச்சியை கொண்டு வருவதும், குழந்தைகள் இறப்பை குறைப்பதும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதிலும் கவனம் செலுத்துவோம் என ஒவைசி தெரிவித்துள்ளார்.
- கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- தற்போது 61 இடங்களில் போட்டியிட்டு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. நேரம் செல்லசெல்ல இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அனைத்து தொதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை லாலுவின் இந்த கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
- தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
243 தொகுதிகளுக்கு நடைபெற்ற பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகின.
இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .
உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும். நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்ககளின் பட்டியலில் பீகார் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.






