என் மலர்
இந்தியா

'எந்தப் பாகுபாடும் இல்லை' - புதிய யுஜிசி விதிகள் குறித்து தர்மேந்திர பிரதான் விளக்கம்!
- சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- புதிய விதிகளில் 'பொய்ப் புகார்கள்' அளிப்பவர்கள் மீதான தண்டனை குறித்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
யுஜிசியின் புதிய விதிகள், குறிப்பாக 'உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026' -ன் கீழ் எவருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் யாரையும் குறிவைத்துத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும், அனைவருக்கும் நியாயமான முறையில் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது யுஜிசி, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள்ளேயே மேற்கொள்ளப்படும் என்றும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சமபங்கு விதிமுறைகள் என்னும் இந்த புதிய விதிமுறை கூறுவது என்ன?
ஜனவரி 13, 2026 அன்று அறிவிக்கப்பட்ட இந்த விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டநாட்களாக எழுந்துவருகிறது. இதனை ஒழுங்குப்படுத்த தற்போது இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமும் 'சம வாய்ப்பு மையம்' (Equal Opportunity Centre) ஒன்றை அமைக்க வேண்டும் என்பது இந்த விதிகளின் ஒரு முக்கிய அம்சமாகும். அதேபோல கல்வி நிறுவனத் தலைவரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட சமத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 50% உறுப்பினர்கள் SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் அல்லது பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளின் கீழ், பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBCs) உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேர உதவி எண் மற்றும் ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட வேண்டும். சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாகுபாடு தொடர்பான புகார்களைக் கையாள்வதில் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களே இனி நேரடியாகப் பொறுப்பாவார்கள். விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுத்தம், பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து அல்லது அங்கீகாரம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளுக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள்
சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கான வரையறையில் SC, ST மற்றும் OBC பிரிவினர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் புகார் அளிக்க இதில் தெளிவான வழிமுறைகள் இல்லை என விமர்சிக்கப்படுகிறது.
புதிய விதிகளில் 'பொய்ப் புகார்கள்' அளிப்பவர்கள் மீதான தண்டனை குறித்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கு எதிராக இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சமத்துவக் குழு மற்றும் சமத்துவப் படைகளில் பொதுப் பிரிவினருக்குப் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவில்லை. இது அந்த விசாரணை அமைப்புகளில் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்க வழிவகுக்கும் என கூறுகின்றனர். மேலும் இந்த விதிகள் மாணவர்களிடையே சாதி உணர்வை மேலும் தூண்டி, கல்வி வளாகங்களில் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.






