என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலத்தீவு"

    • மாலத்தீவின் நம்பகமான நண்பர் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.
    • மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    மாலே:

    பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிந்த பிறகு பிரதமர் மோடி மாலத்தீவு சென்றார். மாலேயில் உள்ள வெலினா ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதிபராக பதவி ஏற்றது முதல் இந்தியாவுடன் முரண்பட்டு இருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மூத்த மந்திரிகள் விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மாலத்தீவு குடியரசு சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பின், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம். மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அதிபர் முய்சுவின் செயல் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் இந்தியா-மாலத்தீவு நட்புறவு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
    • பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகின்றனர்.

    பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 23-ந்தேதி இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனப்படும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இங்கிலாந்து மன்னர் சார்லசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இங்கிலாந்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை மாலத்தீவு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

    மேலும், அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மாலத்தீவில் நாளை(26-ந்தேதி) 60-வது சுதந்திரதின விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை தவிர பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

    பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகின்றனர். பல கூட்டு திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மாலத்தீவு அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு முகமது முய்சு பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

    மேலும், சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார்.இதனால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அந்த சமயம் இந்தியா மாலத்தீவுக்கு உதவி கரம் நீட்டியது. இந்த உதவியை தொடர்ந்து அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து தன்னை மாற்றிக்கொண்டார்.

    இதனால் பிரதமர் மோடியின் இந்த மாலத்தீவு சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முகமது முய்சு அதிபராக பதவி ஏற்ற பிறகு இந்திய தலைவர் ஒருவர் மாலத்தீவு செல்வது இதுவே முதன் முறையாகும். பிரதமர் மோடி 3-வது முறையாக மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாளை தாயகம் திரும்புகிறார்.

    • பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி வரை பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    டெல்லியில் இருந்து வரும் 23-ம் தேதி பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, பிரிட்டனுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிபார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு பிரிட்டன் வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பிரிட்டன் நாட்டின் விஸ்கி, கார்கள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எளிதாக்கும் அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கலாம் எனத்தெரிகிறது.

    பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் மோடி 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60-வது தேசிய தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தனது பயணத்தின் போது மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

    மாலத்தீவு-இந்தியா இடையிலான உறவில் சமீப காலமாக கசப்புணர்வுகள் அதிகரித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்.
    • ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு

    மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.

    "உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்" என்று மாலத்தீவு சுற்றுலாத்துறை கத்ரீனாவைப் பாராட்டியுள்ளது.

    இந்த அறிவிப்பு குறித்து கத்ரீனா கூறுகையில், "ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு - அங்கு நேர்த்தி அமைதியுடன் இணைகிறது" என்றார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.

    முன்னதாக, பிரதமர் மோடி மாலத்தீவை புறக்கணித்து லட்சத்தீவுக்கு செல்வதை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!

    பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை!

    மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? என தமிழகத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.
    • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

    டெஹ்ரான்:

    ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருதியது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவு மந்திரி அகமது கலீல் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்குவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் இரு நாடுகளின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
    • அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.

    இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.

    • பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது.
    • ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவி ஏற்றார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளது.

    இந்த ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
    • மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

    இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்

    நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்.
    • மோடி பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சை கருத்து.

    இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.

    மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

    பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். 

    அவர் கூறியதாவது, "இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்" என கூறினார். மேலும் சில மாலத்தீவு அமைச்சர்களும் மோடியின் பயணம் குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தனர்.

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை பணியிடை நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    • இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
    • இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர்.

    மாலே:

    பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து தனது பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

    இதனை விமர்சிக்கும் வகையில் மாலத்தீவு மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 பேரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இது இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மந்திரிகளின் இந்த கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடியை கொடுத்தது.


    மந்திரிகளின் கருத்து அரசின் கருத்து இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த 3 மந்திரிகளையும் சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கருத்துக்கள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர். இந்த கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. வெட்கக் கேடானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    ×