என் மலர்tooltip icon

    இந்தியா

    • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வியடைந்தது.
    • ஒன்றிரண்டு இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது.

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பெண்களின் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண பரிமாற்றம்தான் முக்கிய பங்கு வகித்தது என படுதோல்வியடைந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தெரிவித்துள்ளார்.

    வேலையின்மை, இடம்பெயர்வு மற்றும் மாநிலத்தில் தொழில் பற்றாக்குறை போன்ற அழுத்தமான பிரச்சினைகளை எழுப்பி, அதிக அளவில் பிரசாரம் செய்த போதிலும், ஜன் சுராஜ் கட்சியால் தனக்கு ஆதரவாக வாக்குகளை பெற முடியவில்லை.

    தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், "சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் நாங்கள் அப்செட் ஆகவில்லை. நாங்கள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை என்றாலும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

    மக்கள் ராஷ்டிரிய ஜனத தளம் மீண்டும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பதையும் இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. பீகாரில் ஆளும் NDA அரசாங்கத்தால் பெண்களின் கணக்குகளுக்கு ரூ.40,000 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது" என்றார்.

    பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்களுடைய வங்கிக் கணக்கில் தொழில் தொடங்கும் வகையில் தலா ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதி அமமல்படுத்தபின்னரும், இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ஜன் சுராஜ் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது 13 இடங்களை இழந்தது.

    பீகாரில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான்.
    • சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த இளம்பெண், தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவரை பிரிந்த அவர், 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் கலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த வீட்டுக்கு சிறுவனின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடிக்கடி வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    இது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை. தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான். அவன் இரவு நேரத்தில் தனது தாயுடன் படுத்து தூங்கியிருக்கிறான். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறது.

    சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அவர் தாயுடன் இருந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் கையை பிடித்துக்கொண்டு, அவனது தலையை சுவர் மற்றும் குளியலறை கதவில் மோதச் செய்துள்ளார்.

    மேலும் சிறுவனின் மார்பு பகுதியில் அவனது தாய் கைவிரல் நகங்களால் பிரண்டி காயப்படுத்தி உள்ளார். சிறுவனில் நிலை குறித்து அறிந்த அவனது தந்தை, சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேலும் அவர் தனது மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து போலீசிலும் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிறுவனின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
    • மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    பீகார் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது.

    இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை மற்றும் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்.கே.சிங் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.

    இந்தச் சூழலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜக உயர்மட்ட குழு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

    முன்னதாக 2,400 மெகாவாட் பாகல்பூர் மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,000 கோடி ஊழல் நடந்ததாக ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

    மேலும் பீகார் தேர்தலில் குற்றப்பிண்ணனி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தார்.

    மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தூதராகவும், மத்திய உள்துறை செயலாளராகவும் பணியாற்றிய ஆர்.கே.சிங், 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

    2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள அவுரா தொகுதியில் இருந்து மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றார்.

    2017 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். 

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
    • முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலா தோற்றது.

    243 தொகுதிகளுக்கு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் பெண்களும் இளம் வாக்காளர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததாக நம்பப்படுகிறது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றிக்கு 5  காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    முதலாவது சரியான சீட் பகிர்வு ஆகும். என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக, ஜேடியு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி இன்றி இணக்கமான முறையில் இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    ஆனால் எதிர்தரப்பில் காங்கிரஸ்-ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியில் சீட் பகிர்வில் அதிருப்தி காரணமாக வெளிப்படையாக மோதிக்கொண்டது.

    ஹேமந்த் சோரனின் முக்தி மோர்சா, ஒவைசி ஆகியோர் தனித்துப் போட்டியிட்டனர். ஒவைசி 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். தேசிய கட்சியான காங்கிரஸ் அவரை விட 1 சீட் அதிகமாக 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்ததாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பிரச்சாரத்தின் போது 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்ற அச்சத்தை பீகார் மக்களிடையே உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

    மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பேசிய அனைத்து மேடைகளில் லாலு பிரசாத்-இன் காட்டு ராஜ்ஜியம் குறித்து மக்களுக்கு பயமூட்டிய வண்ணம் இருந்தனர். முடிந்தது.

    மூன்றாவதாக, அனைத்து சாதிகளையும் திருப்திப்படுத்தும் வியூகம் என்டிஏவுக்கு கை கொடுத்தது. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலாவின் மூலம் பயனடைந்து வந்த நிலையில் பாஜக பெண்கள் - இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய பார்முலாவை முன்னெடுத்தது.

    குறிப்பாக சுமார் ஒன்றரை கோடி பெண்களுக்கு வங்கிக்கணக்கில் தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை என்ற பெயரில் நேரடியாக ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில், பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட 10-20 சதவீதம் அதிகமாக இருந்தது.

    மேலும் இளைஞர்களை குறிவைத்து சமூக நல திட்டங்களையும் ஆளும் நிதிஷ் குமார் தேர்தலுக்கு முன் முழுவீச்சில் முன்னெடுத்தார்.

    அதேநேரம் முதல் முறை வாக்காளர்கள் 14 லட்சம் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட நிலையில் அந்த வாக்கு வங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாக்காளர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 

    • லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
    • அவரது கட்சி தேர்தலில் விசில் சின்னத்தில் 243 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வரை தனது முகமூடியைக் கழற்ற மாட்டேன் என்று சபதம் செய்திருந்த பிளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வரை தனது முகமூடியைக் கழற்ற மாட்டேன் என்று சபதம் செய்திருந்த பிளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

    பாஜக வேட்பாளர் சஞ்சய் சரவ்கி அந்த தொகுதியில் வென்றார். கடந்த தேர்தலிலும் சஞ்சய் சரவ்கியே வெற்றி பெற்றார்.

    லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற புஷ்பம் பிரியா, சாதி மற்றும் மத அரசியலைப் போலல்லாமல், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதாக உறுதியளித்து 2020 இல் 'தி ப்ளூரல்ஸ் கட்சி'யை நிறுவினார்.

    அவரது தந்தை வினோத் குமார் சவுத்ரி ஒரு ஜே.டி.யு தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவரது தாத்தா உமகந்த் சவுத்ரி, முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர்.

    இந்த முறை, அவரது கட்சி தேர்தலில் விசில் சின்னத்தில் 243 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 

    இருப்பினும், 2020 தேர்தலில், அவரது கட்சி 148 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

    அவர் பொதுவெளியில் எப்போதும் கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்து காணப்படுகிறார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே முகமூடியை கழற்றுவேன் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.

    இப்போது அவர் தோல்வியடைந்ததால், அவர் முகமூடியை கழற்றாமலேயே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொது வெளியில் தோன்றுவாரா என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேட்கின்றனர். 

    • எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
    • லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    பீகாரில் சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்ற சிராக் பஸ்வானின் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2000ஆம் ஆண்டு உருவாக்கிய கட்சியே லோக் ஜனசக்தி.

    கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் காலமான நிலையில் அக்கட்சி உட்பூசலில் சிக்கி தவித்தது.

    அப்போது எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

    கடந்த 2020 பீகார் சட்டசபை தேர்தலில் 137 இடங்களில் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் நிதிஷ் குமாரை தீவிரமாக எதிர்த்து பிரசாரம் செய்த லோக் ஜனசக்தி ஒரே 137 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது.

    இதைத்தொடர்ந்து லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    எனவே, சிராக் பஸ்வான் தனி ஆளாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றப் புதியக் கட்சியை 2021-ம் ஆண்டு தொடங்கினார்.

    2024 மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இணைந்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) 5 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

    என்டிஏவின் மத்திய அமைச்சரவையில் சிராக் பஸ்வான் இடம்பெற்றார். இதைதொடர்ந்து இந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருடன் தோளோடு தோள் சேர்ந்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களில் வெற்றி பெற்று பாஜக, ஜேடியுவுக்கு அடுத்தபடியாக பீகாரின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக அக்கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கியது குறித்து பாஜக, ஜேடியு தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் சந்தேகங்களை உடைத்து சிராக் பஸ்வானின் பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளது. தேஜஸ்விக்கு மாற்றாக என்டிஏவின் இளம் தலைவர் முகமாக சிராக் பஸ்வான் திகழ்கிறார்.

    இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பேசிய சிராக் பஸ்வான், துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் தன்னைப் பார்க்க தனது கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே அவர் துணை முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.  

    • வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.

    • பிரசாந்த் கிஷோர் மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார்.
    • தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.

    பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.

    அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 236 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    இந்த தேர்தலில் முதலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் போட்டியில் இருந்து கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் விலகினார். தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.

    பீகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவரது கட்சிக்கு பீகார் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனர்.

    போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.

    சில இடங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ('நோட்டா') வாக்குகளை விடவும் குறைவாகப் பெற்றனர். இதன் மூலம் பீகார் மக்கள் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுபோல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை கண்டு கொள்ளாமல் தவிர்த்தனர். இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார்.

    அப்போது தேர்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார். ஆனால் அவரது கட்சிக்கு பலன் அளிக்காமல் போய்விட்டது.

    • காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
    • ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.

    பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிப்பதாவதும், அது குறித்து ஆய்வு செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவிரித்திருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.

    பீகார் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை கண்டறிவோம். காங்கிரஸ் தொண்டர்கள் தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்.

    காங்கிரசின் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    மக்களுடன் மக்களாக அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் எங்கள் போராட்டம் போராட்டம் மிக நெடியது. அதில் உண்மையுடன் முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.

    ஐதராபாத் எம்.பி. அசாது தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்தது.

    ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    ஓவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிர்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர்க்காததால் அதிருப்தி அடைந்த ஓவைசி, பீகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஓவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.

    பீகாரில் இதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால் அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.

    • சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×