என் மலர்tooltip icon

    இந்தியா

    • தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
    • ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    • பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெறவேண்டும்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சான்றிதழ் பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட, எதிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வேட்பாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது என கூறி இருந்தார்
    • நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியின் கீழ் உள்ள மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது" என கூறி இருந்தார்

    இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ரோகித் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மனுதாரர் வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இதுபோன்ற அரசியல் விவகாரங்களுக்காக நீதிமன்றங்களை மேடையாக்காதீர்கள். உங்கள் புகாரை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறி வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    • 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.
    • டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்காவில் இருந்து கிளம்பிய டிரம்ப் முன்னதாக இஸ்ரேல் சென்றார்.

    எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி 24 மணி நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.

    இதற்கிடையே இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு டிரம்ப்-ஐ பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் பேசிய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முறை இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை திடீரென நிறுத்த கட்டாயப்படுத்த வரிகளைப் பயன்படுத்தியதாக டிரம்ப் கூறுவது 51வது முறையாகும். டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    காசா தொடர்பாக அவர் மேற்கொண்ட அமைதி முயற்சிகளைப் பாராட்டும்போது நமது பிரதமர் அதேவேளையில் இதுகுறித்து தொடர்ந்து அமைதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.  

    • அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
    • கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், கிணற்றில் குதித்த ஒரு பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

     நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

    மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.

    மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
    • இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் கோட்டயம் மாவட்டம் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.

    இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அனந்து அஜித் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.

    நான் மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதவில், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது தற்கொலைச் செய்தியில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் தான் மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் ஆனந்து அஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    தான் மட்டும் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறினார். உண்மையாக இருந்தால், இது பயங்கரமானது.

    இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.

    சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் போலவே, சிறுவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தில் பரவியுள்ள பெரும் சாபக்கேடாகும்.

    இந்தச் சொல்லப்படாத கொடூரமான குற்றங்களைச் சுற்றியுள்ள மௌனத்தின் திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.     

    • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த்  இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். 

    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதவில், "கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. அனிதா ஆனந்த் அவர்களை வரவேற்றேன்.

    பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழுமைக்காக வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜெய்சங்கரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அனிதா ஆனந்த் கூறும்போது, "இந்தியா- கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்" என தெரிவித்திருந்தார்.  

    • இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • இதுவரை 5 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்தியா- அமெரிக்கா இடையில் பரிந்துரைக்கப்பட்ட இருதரப்பு வரத்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இருதரப்பு அதிகாரிகளுக்கும் அக்டோபர்- நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தத்தின் முதற்பகுதியை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் 6ஆவது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்தியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.

    அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி 3 பேர் கொண்ட குழு வாஷிங்டன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    கடந்த மாதம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு நியூயார்க் சென்றிருந்தது.

    • சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று அடுத்த மாதத்துடன் இரண்டரை வருடம் நிறைவடைகிறது.
    • அதன்பின் டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் முதல்வராகலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதை நவம்பர் புரட்சி என்று குறிப்பிடுகின்றனர்.

    இதற்கிடையே உயர்மட்டக் குழு முடிவின் அடிப்படையில் மாநிலத்தின் தலைமையத்துவத்தை மாற்ற முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-

    இது போன்ற விசயங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. காங்கிரசின் உயர்மட்டக் குழுதான் உயர்ந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்டுக் குழுவின் கருத்துகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமானது. சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகள் இல்லாமல் யாரும் முதல்வராக முடியாது. மெஜாரிட்டி (சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு) இருந்தால் மட்டுமே முதல்வராக முடியும். உயர்மட்டக் குழுவின் ஆசிர்வாதமும் தேவையானது. அங்கே புரட்சியும் இல்லை. மாயையும் இல்லை.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • இஸ்ரேல்- காசா ஒப்பந்தத்தால் ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகள் விடுவிப்பு.
    • டிரம்பின் உண்மையான முயற்சிக்கு ஆதரிப்பதாக பிரதமர் மோடி பதிவு.

    இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவித்தது.

    இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான உறுதிக்குமான காணிக்கை.

    பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் உண்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    ×