என் மலர்
நீங்கள் தேடியது "ஏர் இந்தியா விமானம் விபத்து"
- இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
- இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியை குறை கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
- விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார்.
- என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயதான ரமேஷ் என்ற நபர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
இங்கிலாந்தில் பணியாற்றும் ரமேஷ் அந்நாட்டிலேயே வசித்து வந்தார். அன்றைய தினம் இந்தியாவிலிருந்து தம்பியுடன் நாடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார். ரமேஷ் மிகவும் அதிர்ஷ்டசாலி என பலரும் கருதினர்.
விபத்து நடந்த மறுநாள் மருத்துவமனையில் ரமேஷை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்ட ரமேஷ், தனது முதுகெலும்பாக இருந்த சகோதரனை இழந்ததால், உயிர் பிழைத்தது ஒரு சாபம் போல உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு PTSD எனப்படும் நீண்டகால மன அழுத்த நோயால் அவதிப்படுவதாகவும், தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து திரும்பிய ரமேஷ் விபத்தின் பிறகான தனது வாழ்க்கை குறித்து பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், நான் மட்டுமே உயிர் பிழைத்தவன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம்.
நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வலி நிறைந்ததாக இருக்கிறது. என் வீட்டில் தனியாக இருக்க விரும்புகிறேன். என் அம்மா கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் அறைக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார். நான் வேறு யாருடனும் பேசுவதில்லை. என்னால் அதிகம் பேச முடியவில்லை.
நான் இரவு முழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் மனைவி எனக்கு உதவுகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ரமேஷுக்கு ஏர் இந்தியா சார்பில் ரூ. 22 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
- விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனமான ஹனிவெல் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளைக் தடுத்தீர்கள்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. மற்ற விமானி, "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.
விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது. குழுவினர் 14 வினாடிகளுக்குள் அவற்றை 'ரன்' நிலைக்குத் சொடுக்கினாலும், விமானம் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து 32 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இந்த சுவிட்சுகளின் வடிவமைப்பை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சோதனை செய்து அங்கீகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.
- விமான பணியை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக நண்பரிடமும் சுமீர் சபர்வால் கூறியுள்ளார்.
- 56 வயதான கேப்டன் சபர்வால், அனுபவம் வாய்ந்த விமானி ஆவார்.
விமானம்.... என்றால் இனம்புரியாத உணர்வு ஏற்பட்டு அதனை காணும் பழக்கம் இன்னும் பலரிடம் உள்ளது. இரவில் நிலாவைக் காட்டியும், பகலில் விமானத்தை காட்டியும் குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.
இப்படி விமானத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்ததை தாண்டி தற்போது பயம் தான் உள்ளது. இதற்கு உதாரணம் தான் அகமதாபாத் விமான விபத்து. பல கனவுகளுடன் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் பொதுமக்கள் 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் சுமீர் சபர்வாலுக்கு அவரது 88 வயதான தந்தை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரின் நெஞ்சை ரணமாக்கியது.
விபத்து நிகழ்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தனது தந்தையை பார்த்துக்கொள்வதற்காக விமான பணியிலிருந்து விலக கேப்டன் சுமீர் சபர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது தந்தை புஷ்கராஜிடம் தான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். விமான பணியை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக நண்பரிடமும் சுமீர் சபர்வால் கூறியுள்ளார். ஆனால் அதற்குள் விமான விபத்தில் அவர் உயிரிழந்த துயர சம்பவத்தால் அவரது தந்தையால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாமலும், சுமீர் சபர்வால் நினைவால் அழுதுகொண்டே இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க கேப்டன் சுமீர் சபர்வாலுக்கு அவரது தந்தை அஞ்சலி செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
56 வயதான கேப்டன் சபர்வால், அனுபவம் வாய்ந்த விமானி ஆவார். அவர் தனது தந்தையுடன் மும்பையின் பவாய் பகுதியில் வசித்து வந்தார். அவரது தந்தை புஷ்கராஜ், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்து நிகழ்ந்து 6 நாட்கள் ஆன நிலையில், அச்சம்பவத்தில் இருந்து மீள முடியாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள், பொதுமக்கள் 24 பேர் என மொத்தம் 270 பேர் பலியாகினர்.
விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.
- படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.
- ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன் என்றார்.
- பொதுவாக, பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும்.
- கருப்பு பெட்டி தரவுகளை ஆய்வு செய்த பிறகே அது உறுதி செய்யப்படும்.
கடந்த 12-ந் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, விமானிகள் அறையில் இருந்து பேசப்பட்ட கடைசி வார்த்தைகள் வெளிவந்துள்ளன. ''உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது, மேடே மேடே மேடே'' என்று விமானி அதிர்ச்சி கலந்த குரலில் கூறியுள்ளார்.
அவரது வார்த்தைகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை எட்டியுள்ளன. ஆனால் அடுத்த சில வினாடிகளில் அனைத்து தகவல்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது:-
பொதுவாக, பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும். ஆனால், விபத்துக்குள்ளான விமானம், மொத்தம் உள்ள 3.5 கி.மீ. தூர ஓடுபாதையையும் ஓடிவிட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் அது தெரிகிறது.
எனவே, விமானத்துக்கு போதிய உந்துசக்தி கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும், கருப்பு பெட்டி தரவுகளை ஆய்வு செய்த பிறகே அது உறுதி செய்யப்படும்.
முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஓடுபாதை மாற்றத்துக்கோ, உந்துசக்தி தொடர்பாகவோ வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. வானிலை சீராக இருந்தது. தெளிவாக பார்க்க முடிந்தது. வெப்பநிலை அதிகமாக இருந்தது. ஆனால், வரம்புக்குள் காணப்பட்டது.
ராடார் குறைபாடு எதுவும் காணப்படவில்லை. என்ஜின் கோளாறு கண்டறியப்படவில்லை. அனைத்து தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
உந்துசக்தி கிடைக்காததற்கான காரணங்களை விமான தரவுகள், விமானிகள் அறை குரல் பதிவுகள் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
- ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பதிவான இந்த விபத்து பலரையும் மனதளவில் பாதித்து இருக்கிறது. இதில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆர்யன் அசரியின் நிலைமை சற்று வித்தியாசமானது.
11-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த ஆர்யன், அகமதாபாத்தில் தங்கியிருக்கும் தனது தந்தையை பார்க்கவும், 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வாங்குவதற்குமாக கடந்த 12-ந்தேதி முதல் முறையாக அகமதாபாத் வந்திருந்தான்.
முன்னாள் ராணுவ வீரரான அவனது தந்தைக்கு சமீபத்தில்தான் அகமதாபாத் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காவலாளியாக பணி கிடைத்தது. எனவே அகமதாபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்துக்கும், விமானம் விழுந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரிக்கும் இடையே உள்ள ஒரு 2 மாடி வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது. விமானம் துயரமான முடிவை எட்டவிருப்பதை அறியாமலேயே படம் பிடித்ததுடன், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவும் முடியாமல் தவித்து வருகிறான்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சிறுவன் கூறியதாவது:-
நான் 11-ம் வகுப்பை கடந்த மாதம்தான் முடித்தேன். அத்துடன் 12-ம் வகுப்பிலும் சேர்ந்து விட்டேன். எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்காக தந்தையின் வாடகை வீட்டுக்கு 12-ந்தேதி நண்பகல் சுமார் 12.30 மணியளவில் வந்தேன்.
தந்தையின் வீட்டை அடைந்த சில நிமிடங்களில் விமானம் ஒன்று வீட்டுக்கு மேலே வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். உடனே அதை அருகில் இருந்து பார்க்கும் ஆசையில் மொட்டை மாடிக்கு வேகமாக சென்றேன். ஏனெனில் அதுவரை விமானத்தை நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.
எனவே மாடியில் சென்று விமானம் தலைக்கு மேலே பறப்பதை ஆசையாக பார்த்ததுடன், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது விமானம் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே விமான நிலையத்தின் மறுபுறம் அதை தரையிறக்கக்கூடும் என நினைத்தேன்.
ஆனால் திடீரென அந்த விமானம் விழுந்து வெடித்து சிதறியது. என் கண்களுக்கு முன்பே அந்த துயரம் நடந்தது. அது பயங்கரமாக இருந்தது.
இவ்வாறு ஒருவித பயத்துடனேயே அன்றைய நிகழ்வுகளை விவரித்தான்.
தான் பதிவு செய்த வீடியோவை தனது தந்தைக்கு ஆர்யன் அனுப்பி இருந்தான். பின்னர் அது வைரலானது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக பயன்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரித்து வரும் அவர்கள், ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரித்த அவன், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எனினும் தனது படிப்பை தொடர்வதற்காக சொந்த ஊர் திரும்பி உள்ளான். இவ்வாறு அகமதாபாத் விமான விபத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரை பாதித்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார்.
- பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர விமானத்தில் பயணித்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 10 மாணவர்கள், பொதுமக்கள் 33 பேர் என மொத்த 274 பேர் உயிரிழந்துள்ளனர்
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விமான விபத்தாக பதிவாகி உள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறிவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் பலரையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.
முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்:
குஜராத் மாநிலம் ஹிமாத்நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பயல் காதிக் விபத்துக்குள்ளான விமானத்தில் தான் வெளிநாட்டுக்கு முதல்முறையாக பயணம் செய்துள்ளார். உதய்பூரில் பிடெக் முடித்துள்ள காதிக், இதையடுத்து எம்டெக் படிப்பதற்காக லண்டன் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்ற முதல் நபர் ஆவார்.

படிப்பு நேரம் போக மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த வருமானத்தில் குடும்பத்திற்கு பெரும் உதவியாக அவர் இருந்துள்ளார். பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார். லண்டன் செல்வதற்காக தயாரான பயல் காதிக் சம்பவத்தன்று காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் விதியோ... பயல் காதிக் விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
விமான நிலையத்திற்கு வெளியே குடும்பத்தினருடன் பயல் காதிக் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- ஹைட்ராலிக் முறையில் இயங்கும் ஆக்சுவேட்டர்கள் மடிப்புகளை துல்லியமாக நகர்த்துகின்றன.
- விபத்தில் சிக்கிய 787 போன்ற நவீன ஜெட் விமானங்கள் பல பிளாப்ஸ் கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் விபத்தில் சிக்கி உள்ளது.
விமானத்தின் எஞ்சின், பிளாப்ஸ்கள் மற்றும் தரையிறங்கும் கியர் ஆகியவை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
விமானத்தின் லேண்டிங் கியர் சாதனம் பழைய நிலைக்கு கொண்டு வரப்படவில்லை. விமானத்தின் இறக்கையில் உள்ள பிளாப்ஸ் கருவி விமானம் மேலே எழுவதற்காக கீழே இறக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் விமானங்களுக்கு இறக்கையில் உள்ள பிளாப்ஸ் கருவி மிக முக்கியமானதாகும். பிளாப்ஸ் கருவி விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உயர்-தூக்கும் சாதனமாகும். மேலும் இறக்கையின் மேற்பரப்புப் பகுதியையும் வளைவையும் அதிகரிக்கின்றன. இதனால் விமானம் மெதுவான வேகத்தில் அதிக உயரத்தை உருவாக்க அனுமதிக்கிறது.
காற்றுப்படல வடிவத்தை மேலும் வளைந்ததாகவும் பெரியதாகவும் மாற்றுவதன் மூலம் விமானம் மேலே செல்ல அதிகரிக்கிறது.
விபத்தில் சிக்கிய 787 போன்ற நவீன ஜெட் விமானங்கள் பல பிளாப்ஸ் கருவிகளைப் பயன்படுத்துகின்றன, விமானம் புறப்படுவதற்கோ அல்லது தரையிறங்குவதற்கோ வேகத்தைக் குறைக்கும்போது, அது குறைந்த வேகத்தில் போதுமான லிப்டை உருவாக்க வேண்டும்.
இந்த பிளாப்ஸ் மடிப்புகள் பொதுவாக கீழ்நோக்கி நீண்டு, சிறிது இயக்கம் பொதுவாக ஹைட்ராலிக் அல்லது மின்சார இயக்கிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது, விமானி விரும்பிய மடிப்பு அமைப்பைத் தேர்ந்தெடுக்கிறார்.
பயணத்தின் போது, இழுவைக் குறைக்கவும் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் கிளாப்ஸ் மடிப்புகள் முழுமையாக பின்வாங்கப்படுகின்றன. இது விமானத்தை மெதுவாக்கவும், தரையிறங்கும் போது செங்குத்தாக இறங்கவும் உதவுகிறது.
787 ரக விமானங்களில் புறப்படும் கட்டமைப்பு எச்சரிக்கை அமைப்பு உள்ளது. பைலட் மடிப்புகளை அமைக்க மறந்துவிட்டாலோ அல்லது அவை பயன்படுத்தப்படா விட்டாலோ, புறப்படும் உந்துதல் பயன்படுத்தப்படும்போது அமைப்பு ஒரு உரத்த கட்டமைப்பு எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
ஒரு அமைப்பில் தோல்வி ஏற்பட்டாலும் கூட பிளாப்ஸ் பயன்பாட்டை உறுதி செய்வதற்கான பல தேவையற்ற ஹைட்ராலிக் அமைப்புகள் உள்ளன.
ஹைட்ராலிக் முறையில் இயங்கும் ஆக்சுவேட்டர்கள் மடிப்புகளை துல்லியமாக நகர்த்துகின்றன. அனைத்து பிளாப்ஸ் மேற்பரப்புகளும் விமானக் கட்டுப்பாட்டு மின்னணுவியல் மூலம் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

பிளாப்ஸ் முழுமையாக நீட்டிக்கப்படாவிட்டால், வேக பிரேக்குகள், ஸ்பாய்லர்கள் மற்றும் ஆட்டோபிரேக்குகள் அதிவேக தரையிறக்கங்களை நிர்வகிக்க உதவுகின்றன.
விமானிகளுக்கு "பிளாப்ஸ் இல்லாத" மற்றும் "பகுதி-மடிப்பு" தரையிறங்கும் நடைமுறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, இதில் அணுகுமுறை வேகம், ஓடுபாதை நீளத் தேவைகள் மற்றும் பயண அளவுகோல்களில் சரிசெய்தல் ஆகியவை அடங்கும்.
787 போன்ற மிகவும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்ட விமானத்தில், பிளாப்ஸ் செயலிழப்பு அரிதானது என தெரிவித்துள்ளனர்.
- விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
- விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம் அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது. விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.

அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும். ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், "அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன. அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு. எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா? என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர். என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது. இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
- பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த விமானத்தில் பல கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட டாக்டர், அவரது மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், லண்டனில் படிக்கும் கணவனை காண புறப்பட்ட புதுப்பெண்ணும், மகளை காண லண்டனுக்கு புறப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி என பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விமானம் விபத்து தொடர்பான தகவல்கள் அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசித்திரமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று காலை Mid- day ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஏர் இந்தியா விமானம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்ஜானியாவின் தந்தையர் தின நிகழ்வை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் சிக்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பிற்பகலில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட காட்சியை உண்மையில் நிகழ்ந்திருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.

விமான விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தற்செயல் நிகழ்வு வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை நினைவூட்டுகிறது.






