என் மலர்tooltip icon

    உலகம்

    ஒவ்வொரு நாளும் வேதனை..  260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி
    X

    ஒவ்வொரு நாளும் வேதனை.. 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி

    • விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார்.
    • என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தில் எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயதான ரமேஷ் என்ற நபர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இங்கிலாந்தில் பணியாற்றும் ரமேஷ் அந்நாட்டிலேயே வசித்து வந்தார். அன்றைய தினம் இந்தியாவிலிருந்து தம்பியுடன் நாடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார். ரமேஷ் மிகவும் அதிர்ஷ்டசாலி என பலரும் கருதினர்.

    விபத்து நடந்த மறுநாள் மருத்துவமனையில் ரமேஷை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்ட ரமேஷ், தனது முதுகெலும்பாக இருந்த சகோதரனை இழந்ததால், உயிர் பிழைத்தது ஒரு சாபம் போல உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு PTSD எனப்படும் நீண்டகால மன அழுத்த நோயால் அவதிப்படுவதாகவும், தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து திரும்பிய ரமேஷ் விபத்தின் பிறகான தனது வாழ்க்கை குறித்து பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், நான் மட்டுமே உயிர் பிழைத்தவன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம்.

    நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வலி நிறைந்ததாக இருக்கிறது. என் வீட்டில் தனியாக இருக்க விரும்புகிறேன். என் அம்மா கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் அறைக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார். நான் வேறு யாருடனும் பேசுவதில்லை. என்னால் அதிகம் பேச முடியவில்லை.

    நான் இரவு முழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் மனைவி எனக்கு உதவுகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.

    விபத்தில் காயமடைந்த ரமேஷுக்கு ஏர் இந்தியா சார்பில் ரூ. 22 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×