என் மலர்
இந்தியா

விமான விபத்தை படம் பிடித்த சிறுவன்- அதிர்ச்சியில் இருந்து மீளாத துயரம்
- தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
- ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பதிவான இந்த விபத்து பலரையும் மனதளவில் பாதித்து இருக்கிறது. இதில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆர்யன் அசரியின் நிலைமை சற்று வித்தியாசமானது.
11-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த ஆர்யன், அகமதாபாத்தில் தங்கியிருக்கும் தனது தந்தையை பார்க்கவும், 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வாங்குவதற்குமாக கடந்த 12-ந்தேதி முதல் முறையாக அகமதாபாத் வந்திருந்தான்.
முன்னாள் ராணுவ வீரரான அவனது தந்தைக்கு சமீபத்தில்தான் அகமதாபாத் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காவலாளியாக பணி கிடைத்தது. எனவே அகமதாபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்துக்கும், விமானம் விழுந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரிக்கும் இடையே உள்ள ஒரு 2 மாடி வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது. விமானம் துயரமான முடிவை எட்டவிருப்பதை அறியாமலேயே படம் பிடித்ததுடன், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவும் முடியாமல் தவித்து வருகிறான்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சிறுவன் கூறியதாவது:-
நான் 11-ம் வகுப்பை கடந்த மாதம்தான் முடித்தேன். அத்துடன் 12-ம் வகுப்பிலும் சேர்ந்து விட்டேன். எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்காக தந்தையின் வாடகை வீட்டுக்கு 12-ந்தேதி நண்பகல் சுமார் 12.30 மணியளவில் வந்தேன்.
தந்தையின் வீட்டை அடைந்த சில நிமிடங்களில் விமானம் ஒன்று வீட்டுக்கு மேலே வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். உடனே அதை அருகில் இருந்து பார்க்கும் ஆசையில் மொட்டை மாடிக்கு வேகமாக சென்றேன். ஏனெனில் அதுவரை விமானத்தை நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.
எனவே மாடியில் சென்று விமானம் தலைக்கு மேலே பறப்பதை ஆசையாக பார்த்ததுடன், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது விமானம் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே விமான நிலையத்தின் மறுபுறம் அதை தரையிறக்கக்கூடும் என நினைத்தேன்.
ஆனால் திடீரென அந்த விமானம் விழுந்து வெடித்து சிதறியது. என் கண்களுக்கு முன்பே அந்த துயரம் நடந்தது. அது பயங்கரமாக இருந்தது.
இவ்வாறு ஒருவித பயத்துடனேயே அன்றைய நிகழ்வுகளை விவரித்தான்.
தான் பதிவு செய்த வீடியோவை தனது தந்தைக்கு ஆர்யன் அனுப்பி இருந்தான். பின்னர் அது வைரலானது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக பயன்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரித்து வரும் அவர்கள், ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரித்த அவன், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எனினும் தனது படிப்பை தொடர்வதற்காக சொந்த ஊர் திரும்பி உள்ளான். இவ்வாறு அகமதாபாத் விமான விபத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரை பாதித்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






