என் மலர்
இந்தியா

இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.






