என் மலர்tooltip icon

    இந்தியா

    • இஸ்ரேல்- காசா ஒப்பந்தத்தால் ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகள் விடுவிப்பு.
    • டிரம்பின் உண்மையான முயற்சிக்கு ஆதரிப்பதாக பிரதமர் மோடி பதிவு.

    இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவித்தது.

    இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான உறுதிக்குமான காணிக்கை.

    பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் உண்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • 243 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது.
    • 116 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.

    அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி பீகார் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

    முதற்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் ஆட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய பட்டியலில் 65 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 116 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இரண்டு கட்ட பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.

    தேஜஸ்வியை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
    • சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

    புதுடெல்லி:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்தும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதே போல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருதிக்கின் தந்தை பன்னீர் செல்வம், பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி பா.ஜ.க. தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

    கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை.

    இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தீர்ப்பை 13-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் தீர்ப்பு கூறினார்கள். அதில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் இருப்பார்கள்.

    இந்த குழுவில் உள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.

    இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி மாதம்தோறும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை ஐகோர்ட்டின் செயல்பாடு மற்றும் 2 பேர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் முறையிட்டனர். அதாவது மனுதாரர்களுக்கு தெரியாமலேயே அவர்களது பெயரில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    உத்தரவு பிறப்பித்த 2 வழக்குகளில் மனுதாரர்கள் மனுவை தாக்கல் செய்யவே இல்லை. எனவே இதை சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

    இதையடுத்து நீதிபதிகள், "மனுதாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடுவோம்" என்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது தமிழக வெற்றிக்கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    • உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது
    • ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    யார் இந்த அஜய் ரஸ்தோகி?

    ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் ரஸ்தோகி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர்.

    2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், ரஸ்தோகி 158 வழக்குகளை விசாரித்துள்ளார். குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்தை மீறிய உறவுகளை குற்ற மற்றதாக்குதல், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகவும் பல முக்கிய தீர்ப்பு அஜய் ரஸ்தோகி வழங்கியுள்ளார்.

    • வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார்.
    • அந்த வாலிபரின் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும், தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக இயங்கி வருகின்றன.
    • ‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ என்ற திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி ஆகிய பிரதான கூட்டணிகளும், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

    தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக இயங்கி வருகின்றன. மறுபுறம் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரமும் அனல் பறந்து வருகிறது.

    அந்தவகையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் விரைவில் இணைகிறார்கள்.

    குறிப்பாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். பா.ஜ.க. தொண்டர்களுடனான அவரது கலந்துரையாடலுடன் இந்த பிரசாரம் தொடங்குகிறது.

    'எனது வாக்குச்சாவடி வலிமையானது' என்ற திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடக்கிறது. இதில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு பீகார் பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    • தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
    • மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

    கொல்கத்தா:

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் 23 வயது எம்பிபிஎஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

    மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. விமர்சித்து வருகிறது

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜ.க. முன்னாள் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இங்கு மம்தா பானர்ஜியின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது தலிபான், பாகிஸ்தான் ஆட்சி நடைபெறுகிறதா?

    இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூரின் போது சோபியா குரேசி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் இரவில் சென்றுதான் தாக்குதல் நடத்தினர்.

    மேற்கு வங்க பெண் முதல்வரே, பெண்களை இரவில் வெளியில் வரவேண்டாம் என்பதுதான் இன்றைய மேற்கு வங்கத்தின் நிலை.

    இதற்கு மேற்கு வங்க பெண்கள் தக்க பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    • இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
    • யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.

    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.

    அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.

    உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.

    உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.

    • அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.

    புதுடெல்லி:

    வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறுகையில், அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரான செஷாத் பூனாவாலா கூறியதாவது:

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.

    99 தேர்தல்களில் தோற்றதற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு தரலாம்.

    மேலும் கபடநாடகம்,பொய்யான தகவல்களைக் கூறுதல், 1975, 1984-ல் ஜனநாயகத்தைக் கொலை செய்ததற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தெரிவித்தார்.

    • திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.

    மலையான நட்சத்திர நடிகரில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பி. இவர்தான். இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவியால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் முற்றிலும் இல்லாமல் போகியுள்ளது. உண்மையிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். இன்னும் பணம் சம்பாதிப்பது அவசியமானதாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு, அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜனாதிபதியால் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
    • ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

    அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.

    ×