என் மலர்
இந்தியா

காற்றுமாசு- பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு
- டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
- பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.
அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.






