என் மலர்
இந்தியா
- அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.
புதுடெல்லி:
வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறுகையில், அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார் என தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரான செஷாத் பூனாவாலா கூறியதாவது:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.
99 தேர்தல்களில் தோற்றதற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு தரலாம்.
மேலும் கபடநாடகம்,பொய்யான தகவல்களைக் கூறுதல், 1975, 1984-ல் ஜனநாயகத்தைக் கொலை செய்ததற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தெரிவித்தார்.
- திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.
மலையான நட்சத்திர நடிகரில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பி. இவர்தான். இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவியால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் முற்றிலும் இல்லாமல் போகியுள்ளது. உண்மையிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். இன்னும் பணம் சம்பாதிப்பது அவசியமானதாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு, அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியால் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
- ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.
- பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததார்.
- புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்
மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி அந்த தண்ணீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சத்தாரியா கிராமத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டபோது, கிராம கூட்டத்தில் அவருக்குப் ரூ.2,100 அபராதம் விதித்தனர். அன்னு பாண்டே இதை ஏற்றுக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் குஷ்வாஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு படத்தை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய போதும், இது பிராமண சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சிலர் கருதினர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்று கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்கு தண்டனை பெற வேண்டும் செய்ய வேண்டும் என்று கோரியது.
இதன் விளைவாக, புர்ஷோத்தம் அன்னு பாண்டேயின் கால்களைக் கழுவி, அந்த நீரை அருந்த வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், அவர் ரூ.5,100 அபராதம் செலுத்தி பிராமண சமூகத்திடம் மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
வைரலாகி வரும் காணொளியில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னுவின் கால்களைக் கழுவுவது பதிவாகியுள்ளது.
இருப்பினும் இதை எளிதாக கேட்டுக்கொண்ட புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்
ஆனால் இந்தச் சம்பவம் குறித்து புர்ஷோத்தம் உடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
- மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.
மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.
நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.
- அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
- 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.
இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
தொகுதி பங்கீட்டில் நிதீஷ், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கறார் காட்டுவதால் சிக்கீல் நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து அமித்ஷா தலைமையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
- போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.
நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
- ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்
- நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.
இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், "நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்சனையாலோ அல்லது அது போன்ற எதனாலோ அல்ல. எனது பதட்டம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை (மிகவும் நல்ல மனிதர்) என்னை அதில் சேரச் செய்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன்.
ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்" என்று அனந்து எழுதியுள்ளார்.
அனந்துவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் கோரியுள்ளன.
சிபிஐ(எம்) இளைஞர் பிரிவான டிஒய்எஃப்ஐ மாநில செயலாளர் வி.கே. சனோஜ் பேசுகையில், "அன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறினார்.
அனந்து ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அனந்துவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என்று எலிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் ஜிம்மி ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. இயற்கைக்கு மாறான மரணமாக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.
இந்நிலையில் மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் என்பவர் October 7, 2025,கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்து செய்தனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.
1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.
மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்
- பூஜா ஷகுன் பாண்டே வீட்டில்முகமது பைசல் மற்றும் ஆசிப் வேலை பார்த்து வந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியிரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






