என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கல்வி"

    • ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர்.
    • வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு, இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்விக்காக சென்ற நாடுகளில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றனர்.

    அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 630 மாணவர்கள் சென்றனர். இங்கிலாந்துக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 202 மாணவர்களும் சென்றனர். ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர். இதற்காக இந்திய மாணவர்கள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவிட்டனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 614 ஆகும். பஞ்சாப், மராட்டியம் மாநில மாணவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.

    வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.975 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுபோல், வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவை சேர்ந்த 13 லட்சத்து 35 ஆயிரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கும் வயதினரை (18 முதல் 23 வயது வரை) அதிகமாக கொண்ட நாடும் இந்தியா ஆகும். இங்கு அந்த வயதில் 15 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர்.

    கடந்த ஆண்டு, ஒரு வெளிநாட்டு மாணவர் உயர்கல்வி படிக்க இந்தியா வந்தார் என்றால், பதிலுக்கு 28 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு சென்றனர். எனவே, இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

    கடந்த 2021-2022 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • UGC தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.
    • இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது.

    இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.

    இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC தெரிவித்துள்ளது.

    இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு மேல் படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது.

    மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னால், அந்த நிறுவனம் UGC-ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தற்போது டெல்லியில் தான் அதிகப்படியாக 10 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4, கேரளாவில் 2, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒன்று என இந்தப் பட்டியல் நீள்கிறது. 

    • ஹிந்தியை மறைமுகமாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணிக்க முற்படுகிறது
    • 'இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா' என்று அழைக்கப்பட்ட இது, தற்போது 'விக்ஸித் பாரத்' என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது

    விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

    நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு, அவை அனைத்தையும் ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கான இந்த புதிய மசோதாவை இன்று மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த மசோதா மூலம் ஹிந்தியை மறைமுகமாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணிக்க முற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். 

    அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த புதிய மசோதா இந்திய கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். தற்போது உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) ஆகியவற்றுக்குப் பதிலாக, ஒரே ஒரு உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இருப்பினும், மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகள் இந்த புதிய அமைப்பின் வரம்பிற்குள் வராது. இந்த மசோதா எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரிடமிருந்தும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    முன்பு 'இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா' என்று அழைக்கப்பட்ட இது, தற்போது 'விக்ஸித் பாரத்' என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020யின் (NEP) பரிந்துரைப்படியே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

    ×