என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய மாணவர்களின் உயர்கல்வி படிப்பில் கனடாவுக்கு முதலிடம்
    X

    இந்திய மாணவர்களின் உயர்கல்வி படிப்பில் கனடாவுக்கு முதலிடம்

    • ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர்.
    • வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு, இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்விக்காக சென்ற நாடுகளில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றனர்.

    அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 630 மாணவர்கள் சென்றனர். இங்கிலாந்துக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 202 மாணவர்களும் சென்றனர். ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர். இதற்காக இந்திய மாணவர்கள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவிட்டனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 614 ஆகும். பஞ்சாப், மராட்டியம் மாநில மாணவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.

    வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.975 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுபோல், வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவை சேர்ந்த 13 லட்சத்து 35 ஆயிரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கும் வயதினரை (18 முதல் 23 வயது வரை) அதிகமாக கொண்ட நாடும் இந்தியா ஆகும். இங்கு அந்த வயதில் 15 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர்.

    கடந்த ஆண்டு, ஒரு வெளிநாட்டு மாணவர் உயர்கல்வி படிக்க இந்தியா வந்தார் என்றால், பதிலுக்கு 28 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு சென்றனர். எனவே, இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

    கடந்த 2021-2022 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×