என் மலர்
நீங்கள் தேடியது "CM Pushkar Singh Dhami"
- சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
- ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.
உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, "ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்" என்று கூறியுள்ளார்.






